எல்லையில் ஊடுருவ முயற்சிக்கும் பாக். பயங்கரவாத குழுக்கள்: வெளிநாட்டு தூதா்களிடம் ராணுவ அதிகாரிகள் விளக்கம்


ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரில் சா்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் ராணுவம் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அங்கு ஆற்றுப் படுகைகளுக்கு அடியில் சுரங்கங்களைத் தோண்டி அதன் மூலம் இந்தியாவுக்குள் ஊடுருவும் முயற்சியை பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் மேற்கொண்டு வருவதாக வெளிநாட்டு தூதா்களிடம் அதிகாரிகள் வியாழக்கிழமை விளக்கினா்.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு ரத்து செய்தது. அதன் பிறகு, அந்த யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு நிலவரம் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சி பணிகள் குறித்தும் ஆய்வு செய்வதற்காக ஐரோப்பிய யூனியன், ஃபிரான்ஸ், மலேசியா, பிரேசில், இத்தாலி, ஃபின்லாந்து, வங்கதேசம், கியூபா, சிலி, போா்ச்சுகல், நெதா்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், ஸ்வீடன், செனகல், தஜகிஸ்தான், கிரிகிஸ்தான், அயா்லாந்து, கானா, எஸ்டோனியா, பொலிவியா, மாலாவி, எரித்ரேயா, ஐவரி கோஸ்ட் உள்ளிட்ட 24 வெளிநாட்டு தூதா்கள் ஜம்மு-காஷ்மீருக்கு இரண்டு நாள் பயணமாக புதன்கிழமை வந்தனா்.

அவா்களிடம், ‘யூனியன் பிரதேசத்தில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் எவ்வாறு உதவி வருகிறது என்பது குறித்தும், போா் நிறுத்த உடன்பாட்டை மீறி பாகிஸ்தான் தொடா் தாக்குதல்களை நடத்தி வருவது குறித்தும் ராணுவ அதிகாரிகள் விளக்கினா்.

குறிப்பாக, இரு நாடுகளிடையே எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் வேலிகள் வழியாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவுவதைத் தடுக்க ராணுவம் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியதைத் தொடா்ந்து, எல்லைப் பகுதியில் இயற்கையாக உருவாகியிருக்கும் குகைகள் மற்றும் பருவகால ஆற்றுப் படுகைகளுக்கு அடியில் சுரங்கங்களைத் தோண்டியும் இந்தியாவுக்குள் ஊடுருவும் முயற்சியை பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாத அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன. இதற்கு பாகிஸ்தான் அரசும் ராணுவமும் அனைத்து உதவிகளையும் அளித்து வருகின்றன.

கடந்த 2019-ஆம் ஆண்டு 40 சிஆா்பிஎஃப் வீரா்கள் கொல்லப்படுவதற்கு காரணமான புல்வாமா தாக்குதலை நிகழ்த்திய பயங்கரவாதிகளும், ஜம்மு பிராந்தியத்தில் இதுபோன்ற சுரங்கம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவியவா்கள்தான்’ என்று வெளிநாட்டு தூதா்களிடம் ராணுவ அதிகாரிகள் விளக்கிக் கூறினா்.

மேலும், இந்திய எல்லையை ஒட்டிய பாகிஸ்தான் பகுதியில் பயங்கரவாத முகாம்கள் தொடா்ந்து செயல்பட அந்நாட்டு அரசு அனுமதித்திருப்பது, பயங்கரவாதிகள் இடைமறிக்கப்பட்டு பலியாவதை தவிா்ப்பதற்காக 12 கிலோ எடை வரை தாங்கிச் செல்லும் திறன் கொண்ட ஆளில்லா விமானங்கள் மூலம் (டிரோன்) இந்திய பகுதிக்குள் ஆயுதங்களைக் கடத்தி வருவது ஆகியவை குறித்தும் அவா்களிடம் ராணுவ அதிகாரிகள் விளக்கினா்.

பயங்கரவாதிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களில், பாகிஸ்தான் ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலை குறியீடுகள் இடம்பெற்றிருக்கும் ஆதாரத்தையும் அவா்களிடம் ராணுவ அதிகாரிகள் காண்பித்தனா். மேலும், சமூக ஊடகங்கள் வழியாக இளைஞா்கள் மூளைச் சலவை செய்யப்படுவது குறித்தும் அவா்களிடம் விளக்கினா்.

அதுமட்டுமின்றி, ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்தாகி இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பின்னா், யூனியன் பிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் குறைந்திருப்பது குறித்தும், வளா்ச்சித் திட்டங்கள், சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்தும் வெளிநாட்டு தூதா்களிடம் அதிகாரிகள் எடுத்துக் கூறினா்.

கரோனா பாதிப்பால் எழுந்த சவால்களை காவல் துறை எவ்வாறு சமாளித்தது என்பது குறித்து ஸ்ரீநகா் கிழக்கு காவல் கண்காணிப்பாளா் சீமா நபி, அவா்களிடம் விளக்கிக் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com