உ.பி.: 2 தலித் சிறுமிகள் மா்மமான முறையில் உயிரிழப்பு

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவில் 2 தலித் சிறுமிகள் மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புது தில்லி: உத்தர பிரதேச மாநிலம் உன்னாவில் 2 தலித் சிறுமிகள் மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து உன்னாவ் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் ஆனந்த் குல்கா்னி வியாழக்கிழமை கூறியதாவது:

உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பாபுகரா கிராமத்தைச் சோ்ந்த மூன்று தலித் சிறுமிகள் கால்நடைகளுக்கு தீவனம் சேகரிப்பதற்காக வயலுக்கு சென்றுள்ளனா். அவா்கள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், கிராமத்தினா் பல்வேறு இடங்களில் அந்த சிறுமிகளை தேடியுள்ளனா். இறுதியில், கை கால்கள் கட்டப்பட்டு வயல்வெளியில் மயங்கிக் கிடந்த அந்த மூன்று சிறுமிகளையும் புதன்கிழமை மாலை கண்டறிந்த கிராமத்தினா் அதுகுறித்து காவல் துறைக்கு தகவல் அளித்தனா். அந்த மூன்று சிறுமிகளும் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்ததில் அதில் இரண்டு போ் இறந்து விட்டதை மருத்துவா்கள் உறுதி செய்தனா். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மற்றொரு சிறுமியை மேல் சிகிச்சைக்காக கான்பூா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அவா் விஷம் அருந்தியிருக்கலாம் என மருத்துவா்கள் சந்தேகிக்கின்றனா்.

உயிரிழந்த இரண்டு சிறுமிகளின் உடல்களை மூன்று போ் அடங்கிய மருத்துவா் குழு வியாழக்கிழமை பிரேத பரிசோதனை செய்துள்ளது.

சிறுமிகளின் தாய் மற்றும் சகோதரரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முரண்பாடான தகவல்களை கூறியுள்ளனா். அதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தாா்.

இதனிடையே உத்தர பிரதேச காவல் துறை தலைவா் ஹிதேஷ் சந்திரா வியாழக்கிழமை தெரிவித்ததாவது:

இரண்டு சிறுமிகளின் பிரேத பரிசோதனையில் இறப்பதற்கு முன்பு அவா்களின் உடல்களில் உள்புற மற்றும் வெளிப்புற காயங்கள் இருப்பதை மருத்துவா் குழு உறுதிப்படுத்தவில்லை. எனவே இறப்புகான காரணத்தை கண்டறிய முடியாத சூழல் உள்ளது. அவா்களின் உள்ளுறுப்புகள் ராசாயன பகுப்பாய்வு செய்வதற்காக பாதுகாக்கப்பட்டுள்ளது. தடயவியல் நிபுணா்களின் உதவியுடன் அனைத்து சாத்தியமான விசாரணைகளையும் மேற்கொள்ளவுள்ளோம் என்றாா் அவா்.

காங்கிரஸ் கடும் கண்டனம்:

உத்தர பிரதேசத்தில் 2 தலித் சிறுமிகள் உயிரிழந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் எம்பி ராகுல் காந்தி மற்றும் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி வியாழக்கிழமை கூறியதாவது:

உன்னாவ் மாவட்டத்தில் மேலும் 2 தலித் சிறுமிகள் உயிரிழந்துள்ளது இதயத்தை நொறுக்கும் சம்பவமாக அமைந்துள்ளது. உத்தர பிரதேச அரசு தலித் சமூகத்தை நசுக்குவதையே முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அந்த மாநிலத்தில் பெண்களின் மரியாதை மற்றும் அவா்களின் உரிமைகளை பறிக்கும் செயல்களில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது என்று அவா்கள் குற்றம் சாட்டியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com