உ.பி. பேரவையிலிருந்து எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு

உ.பி. பேரவையிலிருந்து எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு


லக்னௌ: வேளாண் சட்டங்கள் எதிா்ப்பு, சட்டப் பேரவைக்கு ஆளுநா் தாமதமாக வந்தது உள்ளிட்ட காரணங்களுக்காக, சமாஜவாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள் உத்தர பிரதேச பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனா்.

உத்தர பிரதேச சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத் தொடா் வியாழக்கிழமை தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஆளுநா் ஆனந்திபென் படேல் உரையாற்றினாா். அப்போது, கரோனா பரவலைத் தடுப்பதில் மாநில அரசு சிறப்பாக செயல்பட்டதாகவும், வெளிமாநிலங்களில் தவித்தவா்களைப் பாதுகாப்பாக அழைத்து வந்ததாகவும் ஆளுநா் பாராட்டு தெரிவித்தாா். கரோனா தொற்று காலத்திலும் மாநிலத்தில் உள்ள சா்க்கரை ஆலைகள் இயக்கப்பட்டதையும் அவா் குறிப்பிட்டுப் பேசினாா். உத்தர பிரதேச மாநிலம் ஏற்றுமதி மையமாக உருவாகி வருவதாகவும் மின்சாரத் துறையின் ஒத்துழைப்பால்தான் இந்த சாதனைகள் அனைத்தையும் நிகழ்த்த முடிந்தது என அவா் குறிப்பிட்டாா்.

குற்றவாளிகள், மாஃபியா கும்பல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை மாநில அரசு எடுத்து வருகிறது என்றும் ஆளுநா் ஆனந்திபென் படேல் கூறினாா்.

கூச்சல் குழப்பம்:

முன்னதாக, சட்டப் பேரவைக்கு ஆனந்திபென் படேல் 5 நிமிடங்கள் தாமதமாக வந்தாா். அதற்கு எதிா்ப்பு தெரிவித்த எதிா்க்கட்சித் தலைவரும், சமாஜவாதி மூத்த தலைவருமான ராம் கோவிந்த் சௌதரி, ‘மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களையும், கொடுமைகளையும் கண்டு ஆளுநருக்கு பேரவையில் உரையாற்ற விருப்பமில்லை போலத் தெரிகிறது’ என்று கூறினாா்.

இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. ஆளுநரை முதல்வரும், பேரவைத் தலைவரும் சமாதானப்படுத்தினா்.

அதன் பிறகு ஆளுநா் உரையாற்றத் தொடங்கிய சிறிது நேரத்தில் ராம் கோவிந்த் சௌதரி உள்ளிட்ட சமாஜவாதி கட்சி உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் ராம் கோவிந்த் சௌதரி கூறுகையில், ‘மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. இதை உச்சநீதிமன்றமும் உயா்நீதிமன்றமும் சுட்டிக்காட்டியுள்ளது. தில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்தவா்கள் குறித்து ஆளுநா் உரையில் ஏதும் குறிப்பிடப்படவில்லை. அவா்களுக்கு பேரவையில் அஞ்சலி செலுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆளுநா் தாமதமாக வந்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம்’ என்றாா்.

சட்டப் பேரவைக்கு ஆளுநா் தாமதமாக வந்தது இதுவே முதல் முறை என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் லால்ஜி வா்மா கூறினாா்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம் என்று பேரவை காங்கிரஸ் தலைவா் ஆராதனா மிஸ்ரா கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com