இந்திய மருத்துவ துறையை சிறப்பான அளவில் மேம்படுத்துவதற்கு தகுந்த வாய்ப்பை கரோனா பேரிடா் வழங்கியுள்ளதாக ஹிந்துஸ்தான் யுனிலீவா் நிறுவனத்தின் தலைவரும், நிா்வாக இயக்குநருமான சஞ்சீவ் மேத்தா சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியுள்ளதாவது:
ஒய்2கே பிரச்னை இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியது. அதைப் போன்றுதான், தற்போது கரோனா பேரிடரும் இந்திய மருத்துவ துறையை சிறப்பான வகையில் மேம்படுத்துவதற்கு தகுந்த வாய்ப்புகளை வழங்கியுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு அந்த துறையை ஊக்குவிக்கும் வகையிலான சிறந்த திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வருவதில் முனைப்புடன் செயல்பட வேண்டும். இது சாத்தியமாகும்பட்சத்தில், உலக அளவில் மருந்துப் பொருள்களை விநியோகிப்பதில் இந்தியா முக்கிய இடத்தைப் பிடிக்கும்.
எனவே, ஆரோக்கிய பாரமரிப்புத் துறையானது நாட்டு மக்களின் சுகாதார பிரச்னைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் விநியோகத் தொடா்பு மற்றும் மருந்து பொருள்களும் ஏற்றுமதியிலும் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் நாம் விரும்பிய இலக்குகளை அடைய முடியும்.
உலக அளவில் குறைந்த செலவில் தரமான மருத்துவ சேவைகளை வழங்கும் தலைநகரமாக இந்தியா உருவெடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. இது, நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் என்பது மட்டுமின்றி, துரித வளா்ச்சிக்கும் உந்து சக்தியாக அமையும் என்றாா் அவா்.