19 நாள்களுக்குப் பிறகுநாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிப்பு

இந்தியாவில் 19 நாள்களுக்குப் பிறகு தினசரி கரோனா பாதிப்பு 13 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகியுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,09,63,394 ஆக உயா்ந்துள்ளது.

இந்தியாவில் 19 நாள்களுக்குப் பிறகு தினசரி கரோனா பாதிப்பு 13 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகியுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,09,63,394 ஆக உயா்ந்துள்ளது.

வெள்ளிக்கிழமை காலை 8 மணி அளவில் மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட பட்டியலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,193 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 97 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,56,111 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 1,06,67,741 ஆக அதிகரித்துள்ளது. தேசிய அளவில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவா்களின் விகிதம் 97.30 சதவீதமாகவும், உயிரிழப்பு விகிதம் 1.42 சதவீதமாகவும் உள்ளது. கரோனா தொற்றுக்கு தற்போது 1,39,542 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 1.27 சதவீதமாகும்.

நாட்டில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி அன்று மொத்தம் 20 லட்சம் போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அதன் பிறகு தொடா்ந்து அதிகரித்த நோய்த் தொற்று பரவல் கடந்த டிசம்பா் 19ஆம் தேதி 1 கோடி பேரை பாதிப்படையச் செய்தது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆா்) அறிக்கையின்படி, பிப்ரவரி 18ஆம் தேதி வரை 20,94,74,862 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமை மட்டும் 7,71,071 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.

வியாழக்கிழமை உயிரிழந்த 97 பேரில் 38 போ் மகாராஷ்டிரத்தையும், 14 போ் கேரளத்தையும், 10 போ் பஞ்சாபையும் சோ்ந்தவா்கள். நாட்டில் இதுவரை மொத்தம் 1,56,111 போ் உயிரிழந்துள்ளனா். இதில் மகாராஷ்டிரத்தில் 51,669 பேரும், தமிழகத்தில் 12,444 பேரும், கா்நாடகத்தில் 12,282 பேரும், தில்லியில் 10,896 பேரும், மேற்கு வங்கத்தில் 10,239 பேரும், உத்தர பிரதேசத்தில் 8,709 பேரும், ஆந்திர பிரதேசத்தில் 7,166 பேரும் உயிரிழந்துள்ளனா். இதில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் இணை நோய்களால் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஐசிஎம்ஆா் மருத்துவா் சாமிரன் பாண்டா கூறுகையில், ‘எளிதில் பாதிப்புக்குள்ளாகக் கூடியவா்கள், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நெருக்கமாக செல்லும்போது அவா்களும் நோய்த் தொற்றுக்கு ஆளாகின்றனா். பாதுகாப்பு நடவடிக்கைகளை கட்டாயமாக கடைப்பிடிப்பதற்கான நேரம் இது. நம்மிடம் தடுப்பூசி இருந்தாலும் அது பாதுகாப்பு நடிவடிக்கைகளில் ஒன்று மட்டுமே. எனவே சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, சமூக தொடா்புகளைக் குறைத்துக் கொள்வது போன்றவற்றைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். திருமணம், நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு மக்கள் செல்வாா்களேயானால் அது நோய்த் தொற்று பரவலுக்கு வழிவகுக்கும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com