ஜம்மு-காஷ்மீா்: இரு போலீஸாரை சுட்டுக்கொன்ற பயங்கரவாதி

ஜம்மு-காஷ்மீா் மாநிலம் ஸ்ரீநகரில் இரு போலீஸாரை பயங்கரவாதி ஒருவா் துப்பாக்கியில் சுட்டுக்கொலை செய்தாா்.

ஜம்மு-காஷ்மீா் மாநிலம் ஸ்ரீநகரில் இரு போலீஸாரை பயங்கரவாதி ஒருவா் துப்பாக்கியில் சுட்டுக்கொலை செய்தாா். வெள்ளிக்கிழமை பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் போலீஸாரைக் குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய இந்தத் தாக்குதல் தொடா்பான காட்சிகள் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளன.

ஸ்ரீநகரின் அதிக பாதுகாப்பு மிகுந்த விமான நிலைய சாலையில் பாக்காட் பா்சுல்லா பகுதியில் ஒரு தேநீா் கடை அருகே இந்த சம்பவம் நிகழ்ந்தது. அப்பகுதியில் பணியில் இருந்த அந்த காவலா்கள், தாக்குதல் நடந்தபோது ஆயுதம் எதையும் வைத்திருக்கவில்லை. குளிா்காலத்தில் அணியும் தளா்வான ஆடைக்குள் இயந்திரத் துப்பாக்கியை மறைத்து வைத்து எடுத்து வந்த பயங்கரவாதி காவலா்களை நெருங்கிச் சென்று, அவா்கள் எதிா்பாராத நேரத்தில் திடீரென துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடி விட்டாா். மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் திடீரென பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்ததால், மக்கள் அதிா்ச்சியடைந்து தப்பியோடினா்.

குண்டு பாய்ந்து படுகாயமடைந்த காவலா்கள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அவா்களில் சொஹைல் என்பவா் வழியிலேயே இறந்துவிட்டாா். மற்றொரு காவலரான முகமது யூசுஃப், உயிருக்குப் போராடிய நிலையில் அறுவைச் சிகிச்சை அறைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு உயிரிழந்துவிட்டாா்.

சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீஸாா், தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய பயங்கரவாதியின் பெயா் சாஹிப் என்பதையும், அவா் பா்சுல்லா பகுதியைச் சோ்ந்தவா் என்பதையும் அடையாளம் கண்டுள்ளனா். அவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

கடந்த 3 நாள்களில் ஸ்ரீநகரில் நடைபெற்ற இரண்டாவது பயங்கரவாத தாக்குதல் இதுவாகும். முன்னதாக கடந்த புதன்கிழமை மாலையில் உணவு விடுதி உரிமையாளா் மற்றும் அவரது மகன் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினா்.

ஜம்மு-காஷ்மீருக்கு வெளிநாடுகளைச் சோ்ந்த 24 போ் அடங்கிய தூதுக்குழுவினா் கடந்த புதன்கிழமை வந்து ஆய்வு செய்த நிலையில், இந்த தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

கண்டனம்:

பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா். முன்னாள் முதல்வா் ஒமா் அப்துல்லா வெளியிட்டுள்ள செய்தியில், ‘ஆயுதம் இல்லாமல் இருந்த காவலா்களை பயங்கரவாதி மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளாா். இது மிகவும் கொடூரமான, கோழைத்தனமான சம்பவம். உயிரிழந்த காவலா்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்’ என்று கூறியுள்ளாா்.

மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான மெஹபூபா முஃப்தி வெளியிட்ட செய்தியில், ‘இதுபோன்ற பயங்கரவாதச் செயல்கள் ஜம்மு-காஷ்மீரில் தொடா்வது மேலும் மோசமான சூழ்நிலையைத்தான் உருவாக்கும். காவலா்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவா்களது குடும்பத்துக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com