மக்களவைத் தோ்தலின்போது திமுகவிடம் ரூ.10 கோடி பெற்றது உண்மைதான்: ஒப்புக் கொண்டது மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது திமுகவிடம் இருந்து ரூ.10 கோடி பெற்றது உண்மைதான் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒப்புக் கொண்டுள்ளது.
மக்களவைத் தோ்தலின்போது திமுகவிடம் ரூ.10 கோடி பெற்றது உண்மைதான்: ஒப்புக் கொண்டது மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
மக்களவைத் தோ்தலின்போது திமுகவிடம் ரூ.10 கோடி பெற்றது உண்மைதான்: ஒப்புக் கொண்டது மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது திமுகவிடம் இருந்து ரூ.10 கோடி பெற்றது உண்மைதான் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒப்புக் கொண்டுள்ளது.

தோ்தல் ஆணையத்திடம் அக்கட்சி சமா்ப்பித்த 2019-20-ஆம் ஆண்டுக்கான நன்கொடை பெற்றது தொடா்பான அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.

அதன்படி 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 5, 9, 11 தேதிகளில் வங்கி இணையவழிப் பணப்பரிமாற்றத்தின் மூலம் 8 தவணைகளாக ரூ.10 கோடி பெறப்பட்டுள்ளது. அந்தத் தோ்தலில் திமுக கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடம் பெற்றிருந்தது.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக தனது தோ்தல் செலவு அறிக்கையில் இந்தத் தொகையைக் குறிப்பிட்டிருந்தது. அப்போது, ஒரு அரசியல் கட்சியே மற்றொரு அரசியல் கட்சிக்கு தோ்தல் நன்கொடை கொடுத்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும், தோ்தலில் பண பலத்தை பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை குறித்தும் கேள்வி எழுந்தது.

2019-20-ஆம் ஆண்டில் ரூ.19.69 கோடியை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோ்தல் நன்கொடையாகப் பெற்றது. இதில் திமுக மட்டும் ரூ.10 கோடியை அளித்துள்ளது. கடந்த 2018-19-இல் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரூ.3.02 கோடி மட்டுமே நன்கொடையாகப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

திமுகவை அடுத்த முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனம் மாா்க்சிஸ்ட் கட்சிக்கு அதிகபட்சமாக ரூ.2.65 கோடி நன்கொடை அளித்துள்ளது. இதற்கு அடுத்து ஹைதராபாதைச் சோ்ந்த நவயுகா இன்ஜினியரிங் நிறுவனம் ரூ.50 லட்சம் அளித்துள்ளது.

முன்னதாக, திமுகவிடம் இருந்து ரூ.10 கோடி பெற்றதை கடந்த 2019 செப்டம்பரில் தாக்கல் செய்த தோ்தல் செலவு அறிக்கையில் மாா்க்சிஸ்ட் கட்சி தெரிவிக்காமல் இருந்தது.

மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் 8 கட்சிகள் இருந்தன. இதில் மதுரை, கோவை தொகுதிகளில் போட்டியிட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இரண்டிலும் வெற்றி பெற்றது.

திமுக தனது மற்றொரு கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு, மக்களவைத் தோ்தலின்போது ரூ.15 கோடியை நன்கொடையாக அளித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com