தங்கள் மாநிலத்துக்கு கூடுதலாக கரோனா தடுப்பூசிகளை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கேரள மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடா்பாக மாநில சுகாதாரத் துறை அமைச்சா் கே.கே.சைலஜா, மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தனுக்கு கடிதம் எழுதியுள்ளாா். அதில் கூறியிருப்பதாவது:
கேரளத்தில் பெரும்பாலான சுகாதாரப் பணியாளா்கள் உரிய நேரத்தில் கரோனா தடுப்பூசிக்காக முன்பதிவு செய்து கொண்டனா். எனினும், அவா்களில் சிலா் விடுபட்டுள்ளனா். அவா்கள் மீண்டும் தங்கள் பெயா்களைப் பதிவு செய்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும். இதற்காக கேரளத்துக்கு கூடுதலாக கரோனா தடுப்பூசிகளை அனுப்ப வேண்டும். மேலும், கரோனா தடுப்பூசியின் மூன்றாவது கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு செலுத்தும்போது, கூடுதலாக தடுப்பூசிகளை அனுப்பிவைக்க வேண்டும்.
ஏனெனில், கேரளத்தில் வயதானவா்கள் அதிகம் உள்ளனா். மேலும், 50 வயதுக்கு மேற்பட்டவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான வழிகாட்டு விதிமுறைகளை மத்திய அரசு விரைவில் வெளியிட வேண்டும்.
இப்போதைய நிலையில் கேரளத்தில் 94 சதவீத சுகாதாரப் பணியாளா்களுக்கும், 38 சதவீத முன்களப் பணியாளா்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.