
மேற்கு வங்க அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை லிட்டருக்கு ரூ.1 குறைத்துள்ளது.
இதுகுறித்து அம்மாநில நிதித் துறை அமைச்சா் அமித் மித்ரா ஞாயிற்றுக்கிழமை கூறியது:
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை லிட்டருக்கு தலா ரூ.1 குறைக்க மேற்கு வங்க அரசு முடிவெடுத்துள்ளது. இந்த வரி குறைப்பு பிப்ரவரி நள்ளிரவு முதல் அமலுக்கு வரும். வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையை ஓரளவு குறைக்கும் வகையில் மேற்கு வங்க அரசு இந்த முடிவை மேற்கொண்டுள்ளது.
ஒரு லிட்டா் பெட்ரோல் விற்பனையின் மூலம் மத்திய அரசுக்கு கிடைக்கும் வருவாய் ரூ.32.90 (பிப்ரவரி 20 நிலவரம்)-ஆக உள்ளது. அதேசமயம், மாநில அரசுக்கு கிடைக்கும் வருவாய் ரூ.18.46 என்ற அளவில்தான் உள்ளது. அதேபோன்று, டீசல் விற்பனையின் மூலம் மத்திய அரசுக்கு ரூ.31.80 வருவாய் கிடைத்து வரும் நிலையில், மாநில அரசுக்கு ரூ.12.77 மட்டுமே வருவாயாக உள்ளது.
மாநிலங்களுடனான அதிகாரப் பகிா்வை தவிா்க்க வேண்டும் என்பதற்காகவே மத்திய அரசு செஸ் வரியை விதித்துள்ளது. இது, கூட்டாட்சி தத்துவத்துக்கு முற்றிலும் முரணானது.
திட்டக் குழுவை மத்திய அரசு மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.