பதஞ்சலியின் கரோனா மருந்துக்கு எதன் அடிப்படையில் விளம்பரம்? மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு சரமாரிக் கேள்வி

​பதஞ்சலி நிறுவனத்தின் கரோனில் ஆயுர்வேத மருந்தை எதன் அடிப்படையில் விளம்பரப்படுத்துகிறீர்கள் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தனிடம் இந்திய மருத்துவச் சங்கம் விளக்கம் கேட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


பதஞ்சலி நிறுவனத்தின் கரோனில் ஆயுர்வேத மருந்தை எதன் அடிப்படையில் விளம்பரப்படுத்துகிறீர்கள் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தனிடம் இந்திய மருத்துவச் சங்கம் விளக்கம் கேட்டுள்ளது.

இதுபற்றி இந்திய மருத்துவச் சங்கத்தின் தேசியத் தலைவர் ஜெயலால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது:

"நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்துகொண்டு, தவறாக புனையப்பட்ட அறிவியலற்ற தயாரிப்பை நாட்டு மக்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்துவது எந்தளவில் நியாயமானது. அதைத் தவறான மற்றும் பொய்யான வழிகளில் விளம்பரப்படுத்துவது எந்தளவில் தார்மீக ரீதியானது.

இந்திய மருத்துவக் கவுன்சில் விதிப்படி, எந்தவொரு மருத்துவரும் எந்தவொரு மருந்தையும் விளம்பரப்படுத்தக் கூடாது. நவீன மருத்துவராக இருந்துகொண்டு சுகாதாரத் துறை அமைச்சரே ஒரு மருந்தை விளம்பரப்படுத்துவது ஆச்சரியமளிக்கிறது.

சில ஏகபோக கார்ப்பரேட் நிறுவனங்களின் சந்தை லாபத்துக்காக ஆயுர்வேதத்தை ஊக்குவித்து மனித குலத்துக்கு பேரழிவை ஏற்படுத்தக் கூடாது.

கரோனில் ஆயுர்வேத மருந்து உலக சுகாதார அமைப்பின் சான்றிதழைப் பெற்றுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சருடன் இணைந்து பாபா ராம்தேவ் கோருகிறார். இது உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கம் மூலம் தெளிவாக மறுக்கப்பட்டுள்ளது. அறிவியலற்ற தயாரிப்பு மருந்தை சுகாதாரத் துறை அமைச்சர் விளம்பரப்படுத்தியிருப்பதும் அதை உலக சுகாதார அமைப்பு நிராகரித்திருப்பதும் நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட பெரும் அவமானம்.   

நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சராகவும் நவீன மருத்துவராகவும் நீங்கள் விளம்பரப்படுத்திய கரோனில் மருந்து தயாரிப்பின் பரிசோதனை முடிவுகள் குறித்து தெளிவுபடுத்த முடியுமா?"

பிப்ரவரி 19-இல் மாபெரும் நிகழ்ச்சி மூலம் மத்தியப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் ஹர்ஷ வர்தன் முன்னிலையில் கரோனில் மருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. பதஞ்சலி நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவ் கரோனில் மருந்தை ஆதாரத்தின் அடிப்படையிலான முதல் கரோனா மருந்து என்றும் இதற்கு உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் கிடைத்தது என்றும் கூறினார். ஆனால், அதிகாரப்பூர்வ சுட்டுரை மூலம், உலக சுகாதார அமைப்பு இதை நிராகரித்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com