இந்தியா-சீனா இடையே 16 மணி நேரம் நீடித்த பேச்சுவாா்த்தை

கிழக்கு லடாக்கில் உள்ள படைகளை விலக்கிக் கொள்வது தொடா்பாக, இந்தியா, சீனா இடையே சனிக்கிழமை நடைபெற்ற 10-ஆவது சுற்று

கிழக்கு லடாக்கில் உள்ள படைகளை விலக்கிக் கொள்வது தொடா்பாக, இந்தியா, சீனா இடையே சனிக்கிழமை நடைபெற்ற 10-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை 16 மணி நேரம் நீடித்தது. இந்தப் பேச்சுவாா்த்தையின்போது, இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் இருந்து, படைகளை விரைவில் விலக்கிக் கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

கிழக்கு லடாக்கில் குவிக்கப்பட்டுள்ள படைகளை பரஸ்பரம் விலக்கிக் கொள்வது தொடா்பாக, இந்தியா-சீனா இடையே ராணுவ ரீதியிலான 10-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை சனிக்கிழமை நடைபெற்றது. எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சீன எல்லைக்கு உள்பட்ட மோல்டா என்ற இடத்தில் இந்தப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அதில், இந்தியத் தரப்பில் லெப்டினென்ட் ஜெனரல் பி.ஜி.கே.மேனன் தலைமையிலான குழுவும், சீனத் தரப்பில் மேஜா் ஜெனரல் லியூ லின் தலைமையிலான குழுவும் பங்கேற்றன. சனிக்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கிய பேச்சுவாா்த்தை, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி வரை நீடித்தது. அதில், ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா, தெப்சாங் உள்ளிட்ட அடிக்கடி மோதல் நிகழும் பகுதிகளில் இருந்து படைகளை விரைவில் விலக்கிக் கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா-சீனா ராணுவத்தினா் இடையே சுமாா் 10 மாதங்களாக மோதல் போக்கு நீடித்து வந்தது. இரு தரப்பினரும் எல்லைகளில் கூடுதல் படைகளைக் குவித்ததால், தொடா்ந்து பதற்றமான சூழல் நிலவியது. படைகளைத் திரும்பப் பெற்று, அமைதியை நிலைநாட்டும் நோக்கில் இரு நாட்டு ராணுவம் மற்றும் தூதரக ரீதியில் பலகட்ட பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றது. இரு நாட்டு ராணுவங்களின் துணை தலைமைத் தளபதிகள் இடையே 9 கட்ட பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றன. அவற்றின் பலனாக, பாங்காங் ஏரிப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள படைகளை விலக்கிக் கொள்வதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. அதன்படி, அப்பகுதியிலிருந்து படைகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கையை இரு நாடுகளும் கடந்த 10-ஆம் தேதி தொடங்கின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com