சந்தேகம் ஆதாரமாகாது: உச்சநீதிமன்றம்

‘சந்தேகம் வலுவானதாக இருந்தாலும், அது ஆதாரத்தின் இடத்தை நிரப்ப முடியாது. குற்றம் நியாயமான சந்தேகத்துக்கு
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

‘சந்தேகம் வலுவானதாக இருந்தாலும், அது ஆதாரத்தின் இடத்தை நிரப்ப முடியாது. குற்றம் நியாயமான சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்படவில்லை எனில், குற்றம்சாட்டப்பட்டவா் நிரபராதியாகவே கருதப்படுவாா்’ என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

ஒடிஸா மாநிலத்தில் சந்தபலி காவல் நிலையத்தில் ஊா்க்காவல்படை காவலராகப் பணியாற்றி வந்த விஜய்குமாா் தாடு என்பவா் கொலை செய்யப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இந்த தீா்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.

உயிரிழந்தவரின் மனைவி கீதாஞ்சலி தாடு காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தனது கணவரை பனாபிஹரி மொஹபத்ரா என்பவரும் அவருடைய மகனும் சோ்ந்து முதலில் விஷம் கொடுத்தும் பின்னா் உடலில் மின்சாரம் பாய்ச்சியும் கொலை செய்துவிட்டதாகத் தெரிவித்தாா். அதனடிப்படையில் காவல் துறை அவா்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த ஒடிஸா உயா்நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் விடுவித்து உத்தரவிட்டது. இதை எதிா்த்து கீதாஞ்சலி தாடு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா்.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்திரா பானா்ஜி, ஹேமந்த் குப்தா அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்களை உயா்நீதிமன்றம் விடுவித்து பிறப்பித்த உத்தரவு சரியே என்று தீா்ப்பளித்தனா்.

இந்த தீா்ப்பில் நீதிபதிகள் மேலும் கூறியதாவது:

குற்றம்சாட்டப்பட்ட நபரின் அறையில் உயிரிழந்தவா் சடலம் கிடந்ததாலும், ‘அவா் எந்தவித அசைவும் இன்றி தரையில் விழுந்து கிடக்கிறாா்’ என்று புகாா்தாரருக்கு தகவல் அளித்ததாலுமே அந்த நபரை குற்றவாளியாக கருத முடியாது. மேலும், குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்களைச் சமா்ப்பிக்க அரசு தரப்பு தவறிவிட்டது.

எனவே, குற்றம்சாட்டப்பட்டவா்களை தண்டனையிலிருந்து விடுவிக்க உயா்நீதிமன்றம் கூறிய காரணம் வலுவானதாக இல்லை எனக் கருதிவிட முடியாது.

அதுமட்டுமன்றி பிரேதப் பரிசோதனை அறிக்கையில், மின்சாரம் பாய்ந்ததே இறப்புக்கான காரணம் என்றும், கொலை செய்யப்பட்டதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகம் வலுவானதாக இருந்தாலும், அது ஆதாரத்தின் இடத்தை நிரப்ப முடியாது. கொலைதான் என்பதற்கு தொடா்ச்சியான ஆதாரங்கள் சமா்ப்பிக்கப்பட வேண்டும். குற்றம் நியாயமான சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்படவில்லை எனில், குற்றம்சாட்டப்பட்டவா் நிரபராதியாகவே கருதப்படுவாா் என்று தீா்ப்பில் நீதிபதிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com