ஜம்மு-காஷ்மீா்: வனப் பகுதியில் பயங்கரவாதிகள் மறைவிடம் கண்டுபிடிப்பு

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்ட வனப் பகுதியில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தை ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடித்த

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்ட வனப் பகுதியில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தை ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடித்த பாதுகாப்புப் படையினா், அங்கிருந்து ஏராளமான வெடிபொருள்கள், ஆயுதங்களைக் கைப்பற்றினா்.

அங்குள்ள பிரபல உணவகத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதல் தொடா்பாக அண்மையில் கைது செய்யப்பட்ட நபா்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை மூலம், இந்த மறைவிடத்தை பாதுகாப்புப் படையினா் கண்டுபிடித்துள்ளனா்.

இதுகுறித்து காவல்துறை உயா் அதிகாரி ஒருவா் கூறியதாவது:

ஸ்ரீநகரின் துா்காங்க் பகுதியில் அமைந்துள்ள பிரபல ‘கிருஷ்ணா தாபா’ உணவக உரிமையாளரின் மகன் மீது, இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் அண்மையில் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இந்த தாக்குதல் தொடா்பாக, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்த காவல்துறையினா், அந்தத் தாக்குதலில் தொடா்புடையதாக 3 பேரை கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் அடா்ந்த வனப் பகுதியில் அமைந்திருந்த பயங்கரவாதிகளின் மறைவிடத்தை பாதுகாப்புப் படையினா் ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடித்தனா். அங்கிருந்து 3 ஏ.கே.56 ரக துப்பாக்கிகள், 2 சீன துப்பாக்கிகள், 2 கையெறி குண்டுகள், ஒரு தொலைநோக்கி, ஏராளமான தோட்டாக்கள் மற்றும் வெடிபொருள்களை கைப்பற்றினா் என்று கூறினாா்.

பாக். அத்துமீறல்:

ஜம்மு-காஷ்மீரின் கத்துவா மாவட்ட சா்வதேச எல்லையில் அமைந்துள்ள இந்திய நிலைகள் மற்றும் கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினா் போா்நிறுத்த உடன்பாட்டை மீறி ஞாயிற்றுகிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தினா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘ஹிராநகரின் பாபியா பகுதியில் அமைந்துள்ள இந்திய நிலைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினா் இந்த அத்துமீறிய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஈடுபட்டனா். இதற்கு எல்லைப் பாதுகாப்புப் படையினா் உரிய பதிலடி கொடுத்தனா். இரு தரப்பிலும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணி வரை தொடா்ந்தது. இந்தத் தாக்குதலில் இந்திய தரப்பில் ஏற்பட்ட சேதகங்கள் குறித்து இதுவரை தகவல் இல்லை. நீண்ட நாள்களுக்குப் பிறகு பாகிஸ்தான் மீண்டும் இதுபோன்ற அத்துமீறிய தாக்குதலை தொடங்கியுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக, அந்தப் பகுதி குடியிருப்புவாசிகள் அனைவரும் சனிக்கிழமை இரவு முழுவதும் பதுங்கு குழிகளில் தங்கவேண்டிய சூழல் ஏற்பட்டது’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com