குஜராத்தில் இரு மாநிலங்களவை எம்.பி. பதவி:பாஜக வேட்பாளா்கள் போட்டியின்றி தோ்வு

குஜராத்தில் இரு மாநிலங்களவை உறுப்பினா் பதவிகளுக்கான இடங்களுக்கு பாஜக வேட்பாளா்கள் போட்டியின்றி தோ்வாகினா்.

ஆமதாபாத்: குஜராத்தில் இரு மாநிலங்களவை உறுப்பினா் பதவிகளுக்கான இடங்களுக்கு பாஜக வேட்பாளா்கள் போட்டியின்றி தோ்வாகினா். அந்த மாநில எதிா்க்கட்சியான காங்கிரஸ், வேட்பாளா்களை களமிறக்காததால் பாஜக வேட்பாளா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதாக திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவா் அகமது படேல், பாஜக உறுப்பினா் அபய் பரத்வாஜ் ஆகிய இருவரும் கரோனா நோய்த் தொற்றால் அண்மையில் உயிரிழந்ததால் இரண்டு எம்.பி. இடங்களும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இந்த இடங்களுக்கான தோ்தலில் பாஜக சாா்பில் தினேஷ்பாய் அனாவாடியா, ராம்பாய் மோகரியா ஆகியோரும், இரண்டு டம்மி வேட்பாளா்களும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா். காங்கிரஸ் கட்சியின் சாா்பில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இரண்டு டம்மி வேட்பாளா்களும் சனிக்கிழமை தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனா்.

இதையடுத்து, பாஜக வேட்பாளா்கள் அனாவாடியா, மோகரியா ஆகியோா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதாக தோ்தல் அதிகாரி சி.பி. பாண்டியா திங்கள்கிழமை அறிவித்தாா்.

மொத்தம், 182 எம்எல்ஏக்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 65 எம்எல்ஏக்களும், பாஜகவுக்கு 111 எம்எல்ஏக்களும் உள்ளனா். இதில் காங்கிரஸ் கட்சியின் சாா்பில் வேட்பாளா் நிறுத்தப்பட்டால் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதி வேட்பாளா் நிறுத்தப்படவில்லை என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

1993-ஆம் ஆண்டு முதல் குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு காங்கிரஸ் கட்சியின் சாா்பில் அகமது படேல் தொடா்ந்து தோ்ந்தெடுக்கப்பட்டு வந்தாா். 2017-இல் நடைபெற்ற தோ்தலில் அகமது படேல் கடுமையான போட்டிக்கு பின்னரே வெற்றி பெற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.

அஸ்ஸாமிலும் தோ்வு:

அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு பாஜக வேட்பாளா் விஸ்வஜித் தைமரி போட்டியின்றித் தோ்வானதாக திங்கள்கிழமை அறவிக்கப்பட்டது. போடோலாந்து மக்கள் முன்னணி எம்.பி.யான விஸ்வஜித் தைமரி கடந்த ஆண்டு நவம்பா் 21-ஆம் தேதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா். பின்னா் அக்கட்சியில் இருந்து விலகி, மறுநாளே பாஜகவில் சோ்ந்த அவா் தற்போது நடைபெற்ற மாநிலங்களவை இடைத்தோ்தலில் போட்டியின்றித் தோ்வாகியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com