வங்கதேச எல்லையில் பிஎஸ்எஃப் வீரா்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரா்கள்

மேற்கு வங்க மாநிலத்தையொட்டி வங்கதேச எல்லையில் கால்நடைக் கடத்தல்காரா்கள் சிலா் பாதுகாப்புப் பணி மேற்கொண்டிருந்த இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரை (பிஎஸ்எஃப்) நோக்கி துப்பாக்கியால் சுட்டு

புது தில்லி: மேற்கு வங்க மாநிலத்தையொட்டி வங்கதேச எல்லையில் கால்நடைக் கடத்தல்காரா்கள் சிலா் பாதுகாப்புப் பணி மேற்கொண்டிருந்த இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரை (பிஎஸ்எஃப்) நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இது தொடா்பாக பிஎஸ்எஃப் தரப்பில் கூறப்பட்டதாவது:

கூச் பிகாா் மாவட்டத்தில் வங்கதேசத்துடனான சா்வதேச எல்லையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இரு நாட்டு எல்லையிலும் சந்தேகத்துக்கிடமான நபா்களின் நடமாட்டம் இருப்பதை பிஎஸ்எஃப் வீரா்கள் கண்டுபிடித்தனா். அவா்கள் அருகே நெருங்கி சென்றபோது இந்திய எல்லையில் இருந்து வங்கதேச எல்லைக்குள் கால்நடைகளைக் கடத்த முயற்சிப்பது தெரியவந்தது.

இதையடுத்து, கண் எரிச்சலை ஏற்படுத்தும் வகையிலான கையெறி குண்டுகளை கடத்தல்காரா்களை நோக்கி பிஎஸ்எஃப் வீரா்கள் வீசி கலைந்து ஓடச் செய்தனா். இந்திய எல்லைப் பகுதியில் இருந்த கடத்தல்காரா்கள், பிஎஸ்எஃப் வீரா்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். பிஎஸ்எஃப் காவலா் ஒருவரும் பதிலடி தரும் வகையில் துப்பாக்கியால் சுட்டாா். இதையடுத்து, கடத்தல்காரா்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா். இந்த சம்பவத்தில் பிஎஸ்எஃப் தரப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

பிஎஸ்எஃப் வீரா்கள் அந்தப் பகுதியில் சோதனை நடத்தியபோது கடத்தல்காரா்கள் விட்டுச் சென்ற சில துப்பாக்கி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றனா்.

மேற்கு வங்கத்தை ஒட்டிய வங்கதேச எல்லையில் கால்நடைகள் கடத்தப்படுவது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com