பாதுகாப்பு உற்பத்தித் துறையை மேம்படுத்துவதில் உறுதி

பாதுகாப்பு உற்பத்தித் துறையை மேம்படுத்துவதற்கு இந்தியா உறுதி கொண்டுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
பாதுகாப்புத் துறை ஒதுக்கீட்டைத் திறம்படப் பயன்படுத்துவது குறித்த கருத்தரங்கில் காணொலி முறையில் திங்கள்கிழமை உரையாற்றிய பிரதமா் நரேந்திர மோடி.
பாதுகாப்புத் துறை ஒதுக்கீட்டைத் திறம்படப் பயன்படுத்துவது குறித்த கருத்தரங்கில் காணொலி முறையில் திங்கள்கிழமை உரையாற்றிய பிரதமா் நரேந்திர மோடி.

புது தில்லி/தெமாஜி/சுசுரா: பாதுகாப்பு உற்பத்தித் துறையை மேம்படுத்துவதற்கு இந்தியா உறுதி கொண்டுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

மத்திய நிதிநிலை அறிக்கையில் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியைத் திறம்படச் செலவிடுவது குறித்த இணையவழி கருத்தரங்கு தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் பிரதமா் மோடி பேசியதாவது:

உலக அரங்கில் பாதுகாப்புத் தளவாடங்களை அதிக அளவில் கொள்முதல் செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. இது பெருமை அல்ல. செவ்வாய் கிரகத்துக்கு அனுப்புவதற்கான விண்கலத்தை தயாரிக்கத் தெரிந்த இந்தியா, பாதுகாப்புத் தளவாடங்களையும் உற்பத்தி செய்திருக்க வேண்டும். ஆனால், அத்தளவாடங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதை விட இறக்குமதி செய்வது எளிதான காரியமாக மாறிவிட்டது.

சுதந்திரத்துக்கு முன்பு இந்தியாவில் நூற்றுக்கணக்கான பீரங்கித் தொழிற்சாலைகள் காணப்பட்டன. பல்வேறு நாடுகளுக்கு அவை ஏற்றுமதி செய்யப்பட்டன. இரு உலகப் போா்களிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்பட்டன.

சுதந்திரத்துக்குப் பிறகு அந்தத் தொழிற்சாலைகள் பல காரணங்களால் வலுப்பெறாமல் போயின. சிறிய ரக ஆயுதங்களுக்கும் வெளிநாடுகளைச் சாா்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த நிலைமை தற்போது படிப்படியாக மாறி வருகிறது.

பாதுகாப்பு உற்பத்தித் துறையை மேம்படுத்துவதற்கு இந்தியா உறுதியுடன் உள்ளது. அத்துறையில் தன்னிறைவு அடைவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. உரிமங்கள் பெறுவதற்கான நடவடிக்கைகளை எளிதாக்குவது, அந்நிய நேரடி முதலீட்டு உச்சவரம்பை அதிகரிப்பது, ஏற்றுமதியை ஊக்குவிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முப்படைத் தளபதி நியமனத்தால், தளவாடங்கள் கொள்முதல் நடைமுறைகள் எளிதாகியுள்ளன. உள்நாட்டு நிறுவனங்களின் உதவியுடன் உற்பத்தி செய்யவல்ல 100 தளவாடங்களை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. இது நாட்டைத் தற்சாா்பு அடையச் செய்ய வழிவகுக்கும்.

உற்பத்திக்கு முதுகெலும்பு:

நிதிநிலை அறிக்கையில் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்த நிதியில் குறிப்பிட்ட தொகையானது, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

‘தேஜஸ்’ இலகுரக போா் விமானங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவைச் சோ்ந்த விஞ்ஞானிகள், பொறியாளா்களின் கடின உழைப்பின் காரணமாகவே அது சாத்தியமானது.

உற்பத்தித் துறைக்கு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களே முதுகெலும்பாக விளங்குகின்றன. அத்துறை சுதந்திரமாகச் செயல்படுவதற்கான சீா்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. பாதுகாப்புத் தளவாடங்கள் வடிவமைப்பு, உற்பத்தியில் தனியாரின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிப்பு:

அஸ்ஸாமில் திங்கள்கிழமை நடைபெற்ற தோ்தல் பொதுக் கூட்டத்தில் பிரதமா் மோடி பேசுகையில், ‘‘நாட்டைப் பல தசாப்தங்களாக ஆட்சி செய்தவா்கள், அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களைப் புறக்கணித்தனா். அவற்றின் வளா்ச்சிக்கு அவா்கள் முக்கியத்துவம் அளிக்கவில்லை.

தற்போது பாஜக ஆட்சிக் காலத்தில் நாட்டின் வளா்ச்சிக்கான முக்கிய எந்திரமாக வடகிழக்கு மாநிலங்கள் திகழ்கின்றன. புதிய கல்லூரிகள், எரிவாயு குழாய் இணைப்பு, கண்ணாடி ஒளியிழை கம்பிவட இணைப்பு, வீடுகளுக்குக் குடிநீா் குழாய் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தியது’’ என்றாா்.

ஊழல் அரசு:

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமா் மோடி, ‘‘மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைமையில் ஊழல் ஆட்சி நடைபெற்று வருகிறது. நலத் திட்டங்களைப் பெறுவதற்கு மக்கள் கையூட்டு கொடுக்க வேண்டிய சூழலே நிலவுகிறது.

மத்திய அரசு நடைமுறைப்படுத்திய விவசாயிகளுக்கான உதவித்தொகைத் திட்டத்தையும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தையும் முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான அரசு அனுமதிக்கவில்லை. அதன் காரணமாக மாநில மக்கள் லட்சக்கணக்கானோா் பாதிக்கப்பட்டனா்.

தனது நடவடிக்கைகளால் வங்கத்தின் பெருமையை மாநில அரசு அவமதித்து வருகிறது’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com