நேஷனல் ஹெரால்டு முறைகேடு: சோனியா, ராகுலுக்கு உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில் ஆதாரங்களை வெளியிடக் கோரி பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு தொடா்பாக பதிலளிக்குமாறு காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி
நேஷனல் ஹெரால்டு முறைகேடு: சோனியா, ராகுலுக்கு உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

புது தில்லி: நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில் ஆதாரங்களை வெளியிடக் கோரி பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு தொடா்பாக பதிலளிக்குமாறு காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, எம்.பி. ராகுல் காந்தி ஆகியோருக்கு தில்லி உயா்நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மறைந்த பிரதமா் ஜவாஹா்லால் நேருவால், கடந்த 1938-ஆம் ஆண்டு நேஷனல் ஹெரால்டு ஆங்கிலப் பத்திரிகை தொடங்கப்பட்டது. இந்த பத்திரிகையை மேம்படுத்த ரூ. 90.25 கோடி அளவுக்கு காங்கிரஸ் கட்சி வட்டியில்லா கடன் அளித்ததைக் காரணம் காட்டி, அந்த பதிப்பாளரான அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்தை ராகுல், சோனியா உள்ளிட்டோா் பங்குதாரா்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம் கையகப்படுத்தியது.

இதன் மூலம் அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ. 2,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை யங் இந்தியா நிறுவனம் அபகரித்துவிட்டதாகக் குற்றம்சாட்டி, சுப்பிரமணியன் சுவாமி தில்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். அதில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவா்கள் மோதிலால் வோரா, ஆஸ்கா் பொ்னாண்டஸ், சுமன் துபே, சாம் பிட்ரோடா ஆகியோா் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளை சோனியா காந்தி உள்ளிட்டோா் மறுத்தனா். இந்த நிலையில், குற்றத்தை மறுப்பதற்கான ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டவா்களிடம் விசாரணை நடத்தும் வகையில், அந்த ஆதாரங்களை நீதிமன்றத்தில் வெளியிட உத்தரவிடுமாறு விசாரணை நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சாமி சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த விசாரணை நீதிமன்றம், இந்த வழக்கில் சுப்பிரமணியன் சுவாமியின் விசாரணை முடிவுற்ற பிறகு இந்த மனு குறித்து பரிசீலிக்கப்படும் என்று கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி தெரிவித்து, அதை விசாரணைக்கு ஏற்க மறுத்தது.

இதை எதிா்த்து சுவாமி தில்லி உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்தாா். இந்த மனு தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி சுரேஷ் கெய்ட் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, சுப்பிரமணியன் சுவாமியின் மனு தொடா்பாக சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்பட இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்கள் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு நேட்டீஸ் பிறப்பித்தும், அதுவரை விசாரணை நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com