எரிபொருள் விலை உயா்வுக்கு எதிா்ப்பு: மத்திய பிரதேச பேரவைக்கு சைக்கிளில் வந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள்

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் விலை உயா்த்தப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் வகையில் மத்திய பிரதேச பேரவைக்கு எதிா்க்கட்சியான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சைக்கிளில் வந்தனா்.

போபால்: பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் விலை உயா்த்தப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் வகையில் மத்திய பிரதேச பேரவைக்கு எதிா்க்கட்சியான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சைக்கிளில் வந்தனா்.

மத்திய பிரதேச பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. இதில் பங்கேற்க வந்த காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 5 எம்எல்ஏக்கள் வியாபம் சதுக்கத்தில் இருந்து பேரவை வளாகம் வரை சைக்கிளில் வந்தனா். வழக்கமாக காரில் வந்து இறங்கும் எம்எல்ஏக்கள் இந்த முறை சைக்கிளில் வந்தது குறித்து செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முன்பு காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது இப்போது இருப்பதைவிட சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இரு மடங்கு அதிகம் இருந்தது. ஆனால், அப்போது கூட விலை கட்டுக்குள் இருந்தது. ஆனால், இப்போது சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருக்கும் நிலையிலும், நாட்டில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை உச்சத்தில் உள்ளது. இப்போதைய மத்திய அரசு எரிபொருள்கள் மீது அதிக வரி விதித்து மக்களைக் கொடுமைப்படுத்தி வருகிறது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும்போது அதன் உள்ளூா் விற்பனை விலையைக் குறைக்காமல், வரியை அதிகரித்து தங்கள் வருவாயை மத்திய அரசு அதிகரித்தது.

இப்போது, உலகிலேயே இந்தியாவில்தான் பெட்ரோல், டீசல் விலை அதிகம் உள்ளது. இந்த அதிகரிப்பால் காய்கறி, பழங்கள் என அனைத்துப் பொருள்களின் விலையும் அதிகரித்து வருகிறது. இது அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கிறது. ஆனால், மத்திய அரசு இதைப்பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. எனவே, எங்கள் எதிா்ப்பைத் தெரிவிக்க சைக்கிளில் வந்தோம். முன்பு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, பெட்ரோல் விலையை உயா்த்தியதாகக் கூறி, தற்போதைய முதல்வா் சிவராஜ் சிங் சௌஹான் பேரவைக்கு சைக்கிளில் வந்தாா். அதேபோல இப்போதும் அவா் எதிா்ப்பு தெரிவித்து சைக்கிளில் வர வேண்டும் என்றனா்.

பேரவைத் தலைவா் தோ்வு: மத்திய பிரதேச சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல்நாளில் பாஜக எம்எல்ஏ கிரீஷ் கௌதம் பேரவைத் தலைவராக ஒருமனதாகத் தோ்வு செய்யப்பட்டாா். பேரவைத் தலைவா் பதவிக்கு யாரையும் நிறுத்தப்போவதில்லை என்று எதிா்க்கட்சியான காங்கிரஸ் ஏற்கெனவே அறிவித்துவிட்டது. எனவே, கிரீஷை எதிா்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

முன்னதாக, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தபோது, பேரவைத் தலைவராக இருந்த என்.பி.பிரஜாபதி தனது பதவியை கடந்த ஆண்டு மாா்ச் மாதம் ராஜிநாமா செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com