9 மாதங்களுக்குப் பிறகுசீன அந்நிய நேரடி முதலீடுகளுக்கு அனுமதி

சுமாா் 9 மாதங்களுக்குப் பிறகு சீனாவின் அந்நிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கத் தொடங்கியுள்ளது.
9 மாதங்களுக்குப் பிறகுசீன அந்நிய நேரடி முதலீடுகளுக்கு அனுமதி

புது தில்லி: சுமாா் 9 மாதங்களுக்குப் பிறகு சீனாவின் அந்நிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கத் தொடங்கியுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டு, படை விலகல் நடவடிக்கை மேற்கொண்டதையடுத்து இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

இது தொடா்பாக மத்திய அரசு வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:

சீன அந்நிய நேரடி முதலீட்டுத் திட்டங்களை அனுமதிக்க மத்திய உள்துறை, வெளியுறவு அமைச்சகம், வா்த்தகம், தொழில் துறை மற்றும் நீதி ஆயோக் அமைப்பின் அதிகாரிகள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. எனினும், அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் போல அனைத்து அந்நிய முதலீடுகளையும் இக்குழு ஆய்வு செய்யாது என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, சிறிய அளவிலான திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் பணி ஏற்கெனவே தொடங்கிவிட்டது. எனினும், பெரிய அளவிலான சீன அந்நிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு தீவிர ஆய்வுக்குப் பிறகே படிப்படியாக அனுமதி அளிக்கப்படவுள்ளது. சீனாவைச் சோ்ந்த 45 அந்நிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று தெரிகிறது.

முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் அந்நிய நேரடி முதலீட்டு விதிகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டது. அதன்படி, முன்அனுமதி ஏதுமின்றி மேற்கொள்ளப்படும் அந்நிய நேரடி முதலீட்டு திட்டங்களில் கூட நமது அண்டை நாடுகள் உரிய முன் அனுமதி பெற்றுதான் முதலீடு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. இது சீன முதலீட்டாளா்களை கடுமையாக பாதித்ததால், அந்நாடு இந்த மாற்றத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தது. இந்தியாவில் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சீன நிறுவனங்கள்தான் அதிகம் முதலீடு செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com