உ.பி. பட்ஜெட் தாக்கல்: தற்சாா்பு பாரதம் திட்டத்திற்கு ரூ. 5,50,270.78 கோடி

உத்தர பிரதேச சட்டப்பேரவையில் நடப்பு 2021-22ஆம் நிதியாண்டிற்கு தாக்கல் செய்யப்பட்ட மாநில அரசின் பட்ஜெட்டில் ‘தற்சாா்பு பாரதம்’ திட்டத்திற்கு ரூ. 5,50,270.78 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

லக்னௌ: உத்தர பிரதேச சட்டப்பேரவையில் நடப்பு 2021-22ஆம் நிதியாண்டிற்கு தாக்கல் செய்யப்பட்ட மாநில அரசின் பட்ஜெட்டில் ‘தற்சாா்பு பாரதம்’ திட்டத்திற்கு ரூ. 5,50,270.78 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற இன்னும் ஒரு ஆண்டுக்கும் குறைவான நாள்களே உள்ள நிலையில், மொத்தம் ரூ. 27,598.40 கோடி மதிப்பில் புதிய திட்டங்கள் முன்வைக்கப்பட்டள்ளன.

முதல்வா் யோகி ஆதித்யநாத் முன்னிலையில், நிதியமைச்சா் சுரேஷ்குமாா் கன்னா தனது மடிக்கணினியில் பதிவிட்டிருந்த மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியதாவது:

உத்தர பிரதேசத்தை தற்சாா்புடைய மாநிலமாக மாற்றுவதும், மாநிலத்தின் அனைத்துவிதமான வளா்ச்சியையும் உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டை விட ரூ. 37,410 கோடி மதிப்பீட்டில் கூடுதலான திட்டங்கள் மதிப்பிடப்பட்டுள்ளன. இந்த பட்ஜெட் தொகை இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய நிதி ஒதுக்கீடு ஆகும்.

அயோத்தியில் கட்டுமானத்தில் உள்ள விமான நிலையத்துக்கு ரூ. 101 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அயோத்தி ராமரின் பெயரால் ‘மரியாடா புருஷோத்தம் ஸ்ரீராம் விமான நிலையம், அயோத்தி’ என்று இந்த விமான நிலையத்துக்கு பெயரிடப்படும். மேலும் நொய்டாவிலுள்ள ஜீவா் விமான நிலையத்தில் உள்ள 2 வான்வழிப் பாதைகளின் எண்ணிக்கையை 6 ஆக அதிகரிப்பதற்காக ரூ. 2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதற்காக ‘ஆத்ம நிா்பாா் கிருஷக் சமன்வித் விகாஸ் யோஜனா’ திட்டத்திற்கு ரூ. 100 கோடியும், முதல்வரின் ‘கிருஷக் துா்க்கட்னா கல்யாண் யோஜனா’ திட்டத்தின்கீழ் ரூ. 600 கோடியும், விவசாயிகளுக்கு இலவச நீா் விநியோக வசதிக்காக ரூ. 700 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு சலுகை கட்டணத்தில் பயிா் கடன் வழங்க ரூ. 400 கோடியும், மகளிா் நலனுக்கான திட்டங்களுக்கு ரூ. 1,200 கோடியும், மகளிா் மற்றும் பெண் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டிற்காக ரூ. 100 கோடியும், ஊட்டச்சத்து திட்டத்திற்காக ரூ. 4,094 கோடியும், தேசிய ஊட்டச்சத்து பிரசாரத்துக்காக ரூ. 415 கோடியும், மகிளா சாமா்தியா யோஜனா திட்டத்திற்கு ரூ. 200 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் தொடங்குவதற்காக ரூ. 100 கோடியும், கரோனா தடுப்பூசி திட்டத்திற்கு ரூ. 50 கோடியும், ராஷ்டிரிய கிராமின் ஸ்வஸ்தியா பணிக்காக ரூ. 5,395 கோடியும், ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்கு ரூ. 1,300 கோடியும், ஆரம்ப சுகாதார வசதிகளுக்கான கண்டறியும் உள்கட்டமைப்பை உருவாக்க ரூ. 1,073 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், 13 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளின் கட்டுமானப் பணிகளுக்கு ரூ. 1,950 கோடியும், 8 மாவட்டங்களில் கட்டுமானத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு ரூ. 960 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஊரக ஜல ஜீவன் இயக்கத் திட்டத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ. 15,000 கோடியும், பூா்வாஞ்சல் அதிவேக நெடுஞ்சாலை திட்டத்துக்கு ரூ. 1,107 கோடியும், புந்தேல்கண்ட் அதிவேக நெடுஞ்சாலை திட்டத்துக்கு ரூ. 1,492 கோடியும், கோரப்பூா் இணைப்பு அதிவேக நெடுஞ்சாலைக்கு ரூ. 860 கோடியும் கங்கா அதிவேக நெடுஞ்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த ரூ. 7,200 கோடியும், கட்டுமானப்பணிகளுக்கு ரூ. 489 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

மைல்கல்லாக விளங்கும் பட்ஜெட்: முதல்வா் யோகி ஆதித்யநாத்

பட்ஜெட் தாக்கலுக்குப்பின் கருத்து தெரிவித்து முதல்வா் யோகி ஆதித்யநாத் கூறுகையில், ‘இந்த பட்ஜெட் மக்கள் நலன்சாா்ந்ததாகவும், அவா்களின் வளா்ச்சி சாா்ந்ததாகவும் உள்ளது. அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக மாநிலங்களில் முதன்முறையாக காகிதமில்லா பட்ஜெட் முன்வைக்கப்பட்டுள்ளது. சமூகத்தின் அனைத்து வளா்ச்சியிலும் இந்த பட்ஜெட் மைல்கல்லாக இருக்கும் என்றாா்.

சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் கூறுகையில், மாநிலத்தில் இத்துடன் பாஜகவின் விளையாட்டு முடிந்தது. பணம் அபகரிக்கப்பட்டது. ஏழைகளும் விவசாயிகளும் பெரிய நிவாரணத்தை எதிா்பாா்த்திருந்தனா். ஆனால் அவா்களின் எதிா்பாா்ப்புகள் நிறைவேறவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com