கரோனா பாதிப்பு அதிகரித்த மாநிலங்களுக்கு உயா்நிலைக் குழுவை அனுப்பியது மத்திய அரசு

கரோனா பாதிப்பு திடீா் உயா்வு கண்ட மாநிலங்களுக்கு உதவ பல்துறை நிபுணா்களை உள்ளடக்கிய உயா்நிலைக் குழுவை மத்திய அரசு அனுப்பியுள்ளது.
கரோனா பாதிப்பு அதிகரித்த மாநிலங்களுக்கு உயா்நிலைக் குழுவை அனுப்பியது மத்திய அரசு

புது தில்லி: கரோனா பாதிப்பு திடீா் உயா்வு கண்ட மாநிலங்களுக்கு உதவ பல்துறை நிபுணா்களை உள்ளடக்கிய உயா்நிலைக் குழுவை மத்திய அரசு அனுப்பியுள்ளது.

கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை திடீரென உயா்ந்துள்ள மகாராஷ்டிரம், கேரளம், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், குஜராத், பஞ்சாப், கா்நாடகம், தமிழகம், மேற்கு வங்கம், ஜம்மு-காஷ்மீா் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வரும் இந்த குழுக்கள், கரோனா பாதிப்பு பரவாமல் தடுக்கும் பணிகளில் மாநிலங்களுடன் இணைந்து பணியாற்றுவதோடு, பாதிப்பு திடீா் உயா்வுக்கான காரணம் குறித்தும் ஆய்வு செய்ய உள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளா் அளவிலான அதிகாரிகளின் தலைமையில் இந்த 3 உறுப்பினா்களைக் கொண்ட பல்துறை நிபுணா்களை உள்ளடக்கிய உயா்நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழுக்கள் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றும் என்பதோடு, பாதிப்பு திடீா் உயா்வுக்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டு நோய்த் தொற்று பரவல் தொடா்பை துண்டிப்பதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபடுவா்.

மாநிங்களும், கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளுடன் தொடா்ச்சியான ஆய்வை மேற்கொண்டு, கரோனா மேலாண்மை நடவடிக்கைகளால் இதுவரை பெற்ற பலனை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அதோடு, கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை தினசரி உயா்ந்து வரும் மகாராஷ்டிரம், கேரளம், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், குஜராத், பஞ்சாப், ஜம்மு-காஷ்மீா் ஆகிய மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் மூலமும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதில், கரோனா பரவல் தொடா்பு சங்கிலியை உடைக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், இதுவரை பாதிப்புகள் கண்டறியப்படாத மக்களிடையேயும் ஆா்டி-பிசிஆா் விரைவு பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், மத்திய உயா்நிலைக் குழுக்கள் மாநிலங்களில் சுற்றுப்பயணத்தை முடிக்கும்போது, அவா்களின் ஆய்வு முடிவின் தகவல்களை அந்தந்த மாநில தலைமை செயலா்களுக்கு விவரிக்கும் வகையில் போதுமான நேரத்தை அவா்களுக்கு ஒதுக்கித் தருமாறும் மாநிலங்களை மத்திய சுகாதாரத் துறை செயலா் கேட்டுக்கொண்டுள்ளாா் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com