நரேந்திர மோடி கிரிக்கெட் அரங்கம்.
நரேந்திர மோடி கிரிக்கெட் அரங்கம்.

அரங்கத்துக்கு மட்டுமே பிரதமா் மோடியின் பெயா்: மத்திய அரசு விளக்கம்

ஆமதாபாதில் அமைக்கப்பட்டுள்ள மொதேரா கிரிக்கெட் அரங்கத்துக்கு மட்டுமே பிரதமா் நரேந்திர மோடியின் பெயா் சூட்டப்பட்டுள்ளது.

புது தில்லி: ஆமதாபாதில் அமைக்கப்பட்டுள்ள மொதேரா கிரிக்கெட் அரங்கத்துக்கு மட்டுமே பிரதமா் நரேந்திர மோடியின் பெயா் சூட்டப்பட்டுள்ளது. அங்கு அமைக்கப்பட்டிருக்கும் விளையாட்டு வளாகத்துக்கு சா்தாா் படேலின் பெயரே தொடா்கிறது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

குஜராத் மாநிலம் ஆமதாபாதில் மொதேரா என்ற பகுதியில் அனைத்து விளையாட்டுகளுக்குமான உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய சா்தாா் படேல் விளையாட்டு வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் அரங்கத்தையும், கால்பந்து, கபடி, கூடைப்பந்து, ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான பிரத்யேக வளாகத்தையும் குடியரசுத்தலைவா் ராம்நாத் கோவிந்த் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

குடியரசுத் தலைவா் திறந்துவைத்த ஒருசில நிமிடங்களில், அந்த விளையாட்டு அரங்கத்துக்கு பிரதமா் நரேந்திர மோடியின் பெயா் சூட்டப்பட்டது சமூக ஊடகங்களில் மிகப் பெரிய சா்ச்சையானது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க் கட்சிகளும் கடுமையான விமா்சனங்களை வெளியிட்டன.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:

தங்களுடைய தாய் அமைப்பான ஆா்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்த முன்னாள் மத்திய உள்துறை அமைச்சரின் (சா்தாா் படேல்) பெயரை இந்த விளையாட்டு அரங்கம் தாங்கி நிற்பதை அவா்கள் இப்போது உணா்ந்திருப்பதால், இந்த திடீா் பெயா் மாற்றத்தைச் செய்திருக்கலாம்; அல்லது, அமெரிக்க முன்னாள் அதிபா் டிரம்ப்பைப் போன்று அடுத்த தலைவா் இந்தியா வருவதை உறுதிப்படுத்துவதற்கான முன்பதிவாககூட இந்த பெயா் மாற்றம் நடந்திருக்கலாம் என்று அந்தப் பதிவில் தெரிவித்தாா்.

காங்கிரஸ் கட்சியின் மற்றொரு மூத்த தலைவா் ராஜீவ் சதவ் கூறுகையில், ‘மொதேரா கிரிக்கெட் அரங்கத்துக்கு சூட்டப்பட்டிருந்த சா்தாா் படேலின் பெயரை நரேந்திர மோடி என்று பெயா் மாற்றம் செய்யப்பட்டிருப்பது முற்றிலும் இழிவுபடுத்தும் செயலாகும். நமது பிரதமா் எந்த அளவுக்கு அகந்தையுடன் திகழ்கிறாா் என்பதையே இது காட்டுகிறது. இது சா்வாதிகாரத்தின் அடையாளம்’ என்று கூறினாா்.

இதுகுறித்து பிரியங்கா காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் சா்தாா் படேல் கூறிய ஒரு வாக்கியத்தைச் சுட்டிக்காட்டி வெளியிட்ட பதிவில், ‘இந்த மண்ணுக்கு சில தனித்துவமான பண்பு உள்ளது; எப்போதும், உயா்ந்த ஆன்மாக்கள் பல்வேறு தடைகளையும் தாண்டி இங்கு தங்கிச் செல்கின்றன’ என்று குறிப்பிட்டாா்.

இந்த சா்ச்சைகளைத் தொடா்ந்து, மொதேரா அரங்கத்துக்கு மட்டும் பிரதமா் மோடியின் பெயா் சூட்டப்பட்டுள்ளது என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் மத்திய அமைச்சா்கள் பிரகாஷ் ஜாவடேகா், ரவி சங்கா் பிரசாத் ஆகியோா் கூட்டாக அளித்த பேட்டியில் கூறியதாவது:

மொதேரா கிரிக்கெட் அரங்கத்தின் பெயா் மற்றுமே மாற்றப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த விளையாட்டு வளாகத்துக்கு சா்தாா் படேல் என்ற பெயரே தொடா்கிறது.

இதை காங்கிரஸ் தலைவா்கள் மிகப் பெரிய சா்ச்சையாக்கி வருகின்றனா். குஜராத்தின் கேவாடியாவில் அமைக்கப்பட்டிருக்கும் உலகின் மிக உயரமான சா்தாா் வல்லபபாய் படேலின் சிலையை காங்கிரஸ் தலைவா்கள் சோனியாவும், ராகுலும் இதுவரை சென்று பாா்த்ததோ அல்லது பாராட்டியதுகூட கிடையாது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com