சட்டவிரோத மதமாற்ற தடைச் சட்ட மசோதா: உ.பி. பேரவையில் நிறைவேற்றம்

சட்டவிரோத மதமாற்றத் தடைச் சட்ட மசோதா, உத்தர பிரதேச சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. 

லக்னௌ: சட்டவிரோத மதமாற்றத் தடைச் சட்ட மசோதா, உத்தர பிரதேச சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. 

"சட்டவிரோத மதமாற்றத் தடைச் சட்ட மசோதா- 2021'யின்படி, எந்த ஒரு நபரும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, கட்டாயப்படுத்தியோ, செல்வாக்கைப் பயன்படுத்தியோ அல்லது திருமணம் என்ற பெயரிலோ மதமாற்றத்தில் ஈடுபடக் கூடாது. அதையும் மீறி, சட்டவிரோத மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ. 50,000 அபராதமும் விதிக்கப்படும். மேலும், பெண்ணை மதமாற்றம் செய்து நடைபெற்ற திருமணமும் சட்டப்படி செல்லாது என்று அறிவிக்கப்படும். அவ்வாறு விருப்பத்துடன் பெண் மதம் மாற முடிவு செய்தால், திருமணத்துக்குப் பிறகு மாவட்ட ஆட்சியரிடம் அதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, அனுமதி பெற வேண்டும்.

ஒருவேளை, அதிக எண்ணிக்கையிலான நபர்கள் ஒரே நேரத்தில் மதமாற்றம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த நடவடிக்கையில் ஈடுபட்ட சமூக அமைப்பின் பதிவு ரத்து செய்யப்படும் என்பதோடு, அந்த அமைப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படும்.

இந்த சட்டத்தின் கீழ் ஒருமுறை தண்டிக்கப்பட்டவர்கள், மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு இரட்டிப்பு தண்டனை விதிக்கப்படும்' என்று இந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இந்த மசோதா உத்தர பிரதேச சட்டப்பேரவையில் புதன்கிழமை கொண்டு வரப்பட்டது. இதை தேர்வுக் குழுக்கு அனுப்ப வேண்டும் என்று காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இறுதியில் அமளிக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com