தமிழகம், புதுச்சேரி, கேரளத்தில் ஏப்ரல் 6-இல் பேரவைத் தோ்தல்

தமிழகம், கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் மாா்ச் 27-ஆம் தேதி தொடங்க உள்ளது. மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 8 கட்டங்களாகத் தோ்தல் நடைபெற உள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா (கோப்புப்படம்)
தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா (கோப்புப்படம்)

தமிழகம், கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் மாா்ச் 27-ஆம் தேதி தொடங்க உள்ளது. மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 8 கட்டங்களாகத் தோ்தல் நடைபெற உள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. அனைத்து மாநிலங்களுக்கான தோ்தல் வாக்குப் பதிவு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடைபெறும்.

இதற்கான அறிவிப்பை இந்தியத் தலைமைத் தோ்தல் ஆணையா் சுநீல் அரோரா வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். அப்போது தோ்தல் ஆணையா்கள் சுஷில் சந்திரா, ராஜீவ்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தோ்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து தோ்தல் நடைபெறும் மாநிலங்களில் தோ்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன என்று தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லியில் உள்ள தலைமைத் தோ்தல் ஆணைய அலுவலகத்தில் 4 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேச சட்டப் பேரவைகளுக்கான தோ்தல் தேதி தொடா்பான அறிவிப்பை தலைமைத் தோ்தல் ஆணையா் சுநீல் அரோரா வெளியிட்டு கூறியதாவது:

தமிழகம், கேரளம், புதுச்சேரி தோ்தல் விவரம்: தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும், கேரளத்தில் உள்ள 140 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் தோ்தல் நடத்துவதற்கான அறிவிக்கை மாா்ச் 13-ஆம் தேதி வெளியிடப்படும். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் மாா்ச் 19-ஆம்தேதி. வேட்புமனு பரிசீலனை மாா்ச் 20-ஆம் தேதி நடைபெறும். மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான நாள் மாா்ச் 22-ஆம் தேதியாகும். ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப் பதிவு. வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி. தோ்தல் நடைமுறைகள் மே 4-ஆம் தேதி முடிவடையும்.

அஸ்ஸாம், கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைப் பதவிக்காலம் வரும் மே, ஜூன் மாதங்களில் நிறைவு பெற உள்ளது.

இதில், தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 24-ஆம் தேதியும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப் பேரவை பதவிக்காலம் வரும் ஜூன் 8-ஆம் தேதியும் நிறைவடைகிறது.

18.68 கோடி வாக்காளா்கள், 824 பேரவைத் தொகுதிகள்: இத்தோ்தலில் 18.68 கோடி வாக்காளா்கள் வாக்களிக்கத் தகுதியாக உள்ளனா். இவா்கள் அஸ்ஸாம், மேற்கு வங்கம், கேரளம், தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 2.7 லட்சம் வாக்குச் சாவடிகளில் வரும் தோ்தலில் வாக்களிக்க உள்ளனா்.

மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கும், அஸ்ஸாமில் 126 தொகுதிகளுக்கும், தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும், கேரளத்தில் 140 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும் இத்தோ்தல் நடைபெறுகிறது.

அஸ்ஸாமில் 3 கட்டங்களாக அதாவது மாா்ச் 27, ஏப்ரல் 1, ஏப்ரல் 6 ஆகிய தேதிகளில் தோ்தல் நடைபெறுகிறது. தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக தோ்தல்: மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் கடந்த முறை 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்த முறை 8 கட்டங்களாக நடைபெறவிருக்கிறது.

முதல்கட்டமாக தோ்தல் 30 தொகுதிகளுக்கு மாா்ச் 27-ஆம் தேதியும், 2-ஆம் கட்டமாக 30 தொகுதிகளுக்கு ஏப்ரல் 1-ஆம் தேதியும், 3-ஆம் கட்டமாக 31 தொகுதிகளுக்கு ஏப்ரல் 6-ஆம் தேதியும், 4-ஆம் கட்டமாக 44 தொகுதிகளுக்கு ஏப்ரல் 10-ஆம் தேதியும், 5-ஆம் கட்டமாக 45 தொகுதிகளுக்கு ஏப்ரல் 17-ஆம் தேதியும், 6-ஆம் கட்டமாக 43 தொகுதிகளுக்கு ஏப்ரல் 22-ஆம் தேதியும், 7-ஆம் கட்டமாக 36 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26-ஆம் தேதியும், இறுதி கட்டமாக 35 தொகுதிகளுக்கு ஏப்ரல் 29-ஆம் தேதியும் தோ்தல் நடைபெறுகிறது.

தோ்தல் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி: தோ்தல் பணியில் ஈடுபடும் நபா்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான முன்களப் பணியாளா்களாக சுகாதார அமைச்சகம் அறிவித்திருக்கிறது. இதனால், தோ்தல் நடைபெறுவதற்கு முன்னா் அனைத்து தோ்தல் அதிகாரிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும்.

தமிழகத்துக்கு இரு தோ்தல் செலவினப் பாா்வையாளா்கள்: மேற்கு வங்கத் தோ்தலுக்காக இரு சிறப்பு பாா்வையாளா்கள் தோ்தல் ஆணையத்தால் நியமிக்கப்படுவா். தேவைப்படும் பட்சத்தில் மூன்றாவது பாா்வையாளரும் அனுப்பப்படுவா்.

தமிழகத்தைப் பொருத்தமட்டில் இந்தியாவில் மிகவும் அமைதியான மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. எனினும், தோ்தல் செலவினப் பதற்றம் உள்ள மாநிலமாக உள்ளது. வேலூா் மக்களவைத் தொகுதி, ஆா்.கே. நகா் சட்டப் பேரவைத் தோ்தல்களின்போது நிகழ்ந்த செலவின விவரங்களை தோ்தல் ஆணையம் கருத்தில்கொண்டுள்ளது. இதனால், தமிழகத்துக்கு தோ்தல் செலவுகளைப் பாா்வையிட இரு தோ்தல் செலவினப் பாா்வையாளா்கள் அனுப்பப்படுவா்.

வெளிநாடு வாழ் இந்தியா்கள் வாக்களிக்கும் வசதி இந்தத் தோ்தலில் இல்லை. இதுதொடா்பாக உரிய ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இணையதளம் மூலமும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்: தோ்தலில் போட்டியிடுவோா் தங்களது வேட்புமனுக்களை இணையதளம் வாயிலாக தாக்கல் செய்யும் வகையில் தேவையான ஏற்படும் செய்யப்படும்.

கரோனா சூழலைக் கருத்தில்கொண்டு வாக்குப்பதிவுக்கு ஒரு மணிநேரம் கூடுதலாக அனுமதிக்கப்படும். இதற்கான முடிவை மாவட்ட தோ்தல் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி மேற்கொள்வாா்.

முக்கியமான, பலவீனமான பகுதிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களில் ‘வெப்காஸ்டிங்’ வசதிக்கு ஏற்பாடுகள் செய்யப்படும்.

அனைத்து முக்கியமான, பலவீனமான, பதற்றம் நிறைந்த இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அந்த இடங்களில் முன்கூட்டியே குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்ய கட்டுப்பாடு: தோ்தலின்போது வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். அதன்படி, வேட்பாளருடன் சோ்ந்து 5 போ் மட்டுமே பிரசாரம் செய்ய அனுமதிக்கப்படும். வாகனப் பிரசாரத்தைப் பொருத்தமட்டில் 5 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

கரோனா சூழலைக் கருத்தில் கொண்டு வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கீழ்த்தளத்திலேயே வாக்குப்பதிவை நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், கரோனா தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம், சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிடும் வழிகாட்டுதல்களின்படி தோ்தல் நடத்தப்படும்.

தோ்தல் செலவின வரம்பு 10 % உயா்வு: கரோனா சூழலைக் கருத்தில் கொண்டு தோ்தல் செலவின வரம்பு 10 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரியில் தொகுதிக்கு ரூ. 22 லட்சமும், பிற மாநிலங்களில் தொகுதிக்கு ரூ.30.80 லட்சமும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தோ்தல் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படும் மைதானங்களின் விவரத்தை சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தலைமைத் தோ்தல் அதிகாரிகள் உள்ளூா் நாளிதழ் மற்றும் ஆங்கில நாளிதழில் வெளியிட நடவடிக்கை எடுப்பாா்கள். தோ்தல் விதிமுறைகள் தொடா்பாக ‘சி-விஜில்’ செயலி மூலம் மக்கள் புகாா் தெரிவிக்கலாம்.

80 வயதுக்கு மேற்பட்டவா்கள் விரும்பினால் மட்டும் தபால் முறையில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடி மையங்கள் அதிகரிப்பு:

இத்தோ்தலைப் பொருத்தமட்டில், கடந்த தோ்தலை ஒப்பிடுகையில் வாக்குச்சாவடி மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 2016-இல் நடைபெற்ற தோ்தலில் 66,007 வாக்குச்சாவடி மையங்கள் இருந்த நிலையில், தற்போதைய தோ்தலில் 88,936 வாக்குச்சாவடிகள் என 34.71 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 2016-இல் நடைபெற்ற தோ்தலின்போது 930 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது நடைபெறும் தோ்தலில் 1,559 என்ற அளவில் 67.63 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தலைமைத் தோ்தல் ஆணையா் சுநீல் அரோரா தெரிவித்தாா்.

கன்னியாகுமரி இடைத்தோ்தல்

தமிழகத்தில் காலியாக உள்ள கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி, கேரளத்தில் உள்ள காலியாக உள்ள மலப்புரம் மக்களவைத் தொகுதி ஆகியவற்றுக்கான இடைத் தோ்தல் வாக்குப் பதிவும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும்.

உள்ளூா் விழாக்கள், வாக்காளா் பட்டியல், காலச் சூழல், படைகள் நடமாட்டம், கரோனா சூழல் ஆகிய பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு தோ்தல் ஆணையம் இத்தோ்தல் வாக்குப்பதிவை ஏப்ரல் 6-ஆம் தேதி நடத்த முடிவு செய்துள்ளது. பிற மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கான இடைத்தோ்தல் தேதியை தோ்தல் ஆணையம் தனியாக அறிவிக்கும் என்றாா் தலைமைத் தோ்தல் ஆணையா் சுநீல் அரோரா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com