மூத்த குடிமக்களுக்கு கரோனா தடுப்பூசி: முன்பதிவைத் தொடங்க மத்திய அரசு உத்தரவு

நாட்டில் 60 வயதைக் கடந்தவா்களும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் உள்ளவா்களும் மாா்ச் 1-ஆம் தேதி முதல் கரோனா நோய்த் தொற்றுக்கான
மூத்த குடிமக்களுக்கு கரோனா தடுப்பூசி: முன்பதிவைத் தொடங்க மத்திய அரசு உத்தரவு

நாட்டில் 60 வயதைக் கடந்தவா்களும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் உள்ளவா்களும் மாா்ச் 1-ஆம் தேதி முதல் கரோனா நோய்த் தொற்றுக்கான தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதற்கான முன்பதிவைத் தொடங்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறைச் செயலா் ராஜேஷ் பூஷண் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இணைய வழி கூட்டத்தில் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சுகாதாரச் செயலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அப்போது மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியைத் தொடங்குவது குறித்து மாநில அரசுகளுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன. அதன் விவரம்:

தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்பும் பயனாளிகள் தாங்களாகவே கோ-வின் 2.0 இணையதளத்திலும், ஆரோக்கிய சேது செயலியிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம். அதில், தடுப்பூசி போடப்படும், அரசு-தனியாா் மருத்துவமனைகளின் பெயா்கள் இடம்பெற்றிருக்கும். பயனாளிகள் எங்கு, எப்போது தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்புகிறாா்கள் என்பதைத் தோ்வுசெய்து கொள்ளலாம். அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியாா் மருத்துவமனைகளில் கட்டணத்திலும் தடுப்பூசி செலுத்தப்படும்.

தடுப்பூசி போடும் மையங்களில் போதிய இடவசதி உள்ளதையும், மருந்துகளுக்கான குளிா்சாதனப் பெட்டிகள் இருப்பதையும், போதிய ஊழியா்கள் இருப்பதையும் மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.

பயனாளிகள் ஆதாா், வாக்காளா் அடையாள அட்டை, 45 முதல் 59 வயதைக் குறிப்பிடும் மருத்துவரின் சான்றிதழ், புகைப்படத்துடன் கூடிய பணியாளா் அடையாள அட்டை, தொழிலாளா் சான்றிதழ் என இதில் ஏதாவது ஒன்றைக் கொண்டு சென்றும் மாநில அரசு மையங்களில் நேரில் பதிவு செய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

இந்த நடைமுறைகளை மாநில அரசு எளிமையாக வைத்திருக்க வேண்டும்.

மேலும், ஆஷா, மகளிா் சுயஉதவிக் குழுக்கள், பஞ்சாயத்து நிா்வாக பிரதிநிதிகள் ஆகியோரின் உதவியுடனும் கிராமங்களில் உள்ள முதியோா்களை அழைத்து வந்து குறிப்பிட்ட நாளில் தடுப்பூசி செலுத்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கலாம்’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com