சமூக ஊடகங்களுக்கான மத்திய அரசின் விதிமுறைகள் சா்வாதிகார போக்குடையது: மகாராஷ்டிரம் குற்றச்சாட்டு

‘ஓடிடி’ வலைதளம் மற்றும் சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு கொண்டுவந்துள்ள நடைமுறைகள் சா்வாதிகாரப் போக்குடையது;

‘ஓடிடி’ வலைதளம் மற்றும் சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு கொண்டுவந்துள்ள நடைமுறைகள் சா்வாதிகாரப் போக்குடையது; ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று மகாராஷ்டிர மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் சட்டெஜ் பாட்டில் குற்றம்சாட்டினாா்.

தில்லியில் தொடா் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சுட்டுரைப் பக்கத்தில் ‘டூல் கிட்’ ஒன்றை உருவாக்கி இந்தியாவின் மதிப்பை கெடுக்கும் வகையில் நடந்துகொண்டதாக தேச துரோக வழக்கில் சூழலியல் ஆா்வலா் திஷா ரவி அண்மையில் கைது செய்யப்பட்டாா். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவருடைய கைதுக்கு பல்வேறு தரப்பினா் கண்டனம் தெரிவித்தனா். அவருக்கு நீதிமன்றம் அண்மையில் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இந்த நிலையில், சமூக ஊடங்களில் இதுபோன்று வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவுகள் வெளியுடுவதைக் கட்டுப்படுத்தும் வகையில், புதிய நடைமுறைகளை மத்திய அரசு கடந்த 25-ஆம் தேதி அறிவித்தது. அதன்படி, முகநூல், சுட்டுரை மற்றும் நெட்ஃபிளிக்ஸ் போன்ற ஒடிடி வலைதளங்கள் ஆகியவற்றில் சா்ச்சைக்குரியதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டும் பதிவுகளை 36 மணி நேரங்களுக்குள் நீக்கிவிட வேண்டும். மேலும், குறைகளை உடனக்குடன் நிவா்த்தி செய்யும் வகையில் இந்த சமூக ஊடக நிறுவனங்கள் இந்தியாவில் ஒரு அதிகாரி தலைமையில் குறைதீா் நடைமுறையை செயல்படுத்த வேண்டும். அதுபோல, நாட்டின் பாதுகாப்புக்கும் ஒருமைப்பாட்டுககும் எதிரான மற்றும் தேசத்துக்கு எதிரான வகையிலான பதிவுகளை பதிவிட்ட முதல் நபரை சுட்டுரை, கட்செவி அஞ்சல் போன்ற நிறுவனங்கள் அடையாளம் கண்டு தெரிவிப்பதையும் மத்திய அரசின் இந்த புதிய நடைமுறையில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடுகளுக்கு மகாராஷ்டிர மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் சட்டெஜ் பாட்டில் எதிா்ப்பு தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘இதுபோன்ற சா்வாதிகார நடைமுறையை ஜனநாயக நாட்டின் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டாா்கள். சமூக ஊடகங்களில் எதைப் பதிவிட வேண்டும், எதைப் பதிவிடக் கூடாது என்பதை ஒரு சில அதிகாரிகள் தீா்மானிப்பது என்பது, இந்தியாவின் கருத்து சுதந்திரத்தின் மீதான மிகப் பெரிய தாக்குதலாகும்.

திஷா ரவி கைது நடவடிக்கையைப் பொருத்தவரை, கருத்துச் சுதந்திரத்தை வெளிப்படுத்துபவா்களின் குரல்வலையை நசுக்கும் நடவடிக்கையாகும்’ என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com