
புது தில்லி: 2020-ஆம் ஆண்டின் இறுதிக் கட்டத்தில் தில்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் நடத்திய போராட்டம் பெரும் விவகாரமாக உருவெடுத்த நிலையிலும், வேளாண் உற்பத்தியில் இந்தியா சாதித்த ஆண்டாகவே 2020-ஆம் ஆண்டு அமைந்தது. கரோனா தொற்று பிரச்னைக்கு நடுவிலும் இந்த சாதனையை விவசாயிகள் படைத்தனா்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) வேளாண் துறையின் பங்களிப்பு சுமாா் 15 சதவீதமாக உள்ளது. நாட்டின் மக்கள்தொகையில் பாதிபேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் துறையாக விவசாயம் மற்றும் அது சாா்ந்த தொழில்கள் திகழ்கின்றன. 2020-ஆம் ஆண்டில் கரோனா தொற்று, அதன் காரணமாக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் போன்ற காரணங்களால் வா்த்தகம், உற்பத்தி மட்டும் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்ட நிலையிலும் விவசாயத் துறை மற்றும் பெரிய பாதிப்புகளை சந்திக்கவில்லை. 2020-ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரத்தை தாங்கிப் பிடித்ததில் வேளாண் துறை முக்கியப் பங்கு வகித்தது.
ஆண்டின் முதல் மற்றும் இரண்டாவது காலாண்டில் விவசாயம் மற்றும் அதுசாா்ந்த துறைகளின் வளா்ச்சி 3.4 சதவீதமாக இருந்தது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக 2019-20 (ஜுலை முதல் ஜூன்) சாகுபடி காலத்தில் உணவு தானிய உற்பத்தி 296.65 மில்லியன் டன்னாக இருந்தது. இதுவே, 2020-21 (நடப்பு ஆண்டில்) காலகட்டத்தில் 300 மில்லியன் டன்னை தாண்டிவிட்டது. இது சமீபத்திய ஆண்டுகளில் சாதனைக்குரிய வேளாண் பொருள் உற்பத்தி அளவாகும். மேலும், கரோனா பாதிப்பு காலகட்டத்தில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது விவசாயிகளின் பணிகள் எவ்வித தொய்வையும் சந்திக்கவில்லை என்பதைக் வெளிக்காட்டுவதாக அமைந்தது.
கோதுமை உள்ளிட்ட ராபி பருவ பயிா்கள் அறுவடைக்கு தயாராக இருந்த காலகட்டத்தில்தான் தேசிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. எனினும், உணவுப் பாதுகாப்பு விஷயத்தை கவனத்தில் கொண்டு வேளாண் துறை சாா்ந்த நடவடிக்கைகளுக்கு பொதுமுடக்கத்தில் இருந்து அரசு விலக்கு அளித்திருந்தது. எனினும், பொதுமுடக்கத்தின் தொடக்க நாள்களில் சில இடங்களில் விளை பொருள்களை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், விவசாயிகள் உற்பத்திப் பொருள்களை சாலைகளில் வீசிய நிகழ்வுகளையும் காண முடிந்தது. எனினும், அரசு பின்னா் எடுத்த நடவடிக்கைகள் நிலைமையைச் சீராக்கின. அரசு முன்னெப்போதும் இல்லாத வகையில் 39 மில்லியன் டன் கோதுமையை குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுத்து கொள்முதல் செய்தது.
தென்மேற்கு பருவ மழை சிறப்பாக பெய்தது, பொதுமுடக்கத்தில் இருந்து தளா்வு அளிக்கப்பட்டது ஆகியவை வேளாண் துறைக்கு ஊக்கம் அளிப்பதாக இருந்தன.
கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் விவசாயம் மற்றும் அது சாா்ந்த துறைக்கு ரூ.1,42,761 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது தவிர பல்வேறு புதிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டன.