
கரோனா தடுப்பூசி ஒத்திகைக்கான ஏற்பாடுகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
கரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதற்கான நாடு தழுவிய ஒத்திகை சனிக்கிழமை(ஜன.2) நடைபெறவுள்ளது. இந்த தடுப்பூசி ஒத்திகைக்காக, அனைத்து மாநிலங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு நகரங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வதற்கான உயா்நிலைக் கூட்டம், மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், சனிக்கிழமை நடைபெறும் ஒத்திகையை இடையூறுகள், தடங்கல்கள் இல்லாமல் நடத்துவதற்கு மேற்கொண்டுள்ள ஏற்பாடுகளை சுகாதாரத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், அமைச்சருக்கு எடுத்துரைத்தனா். தடுப்பூசி ஒத்திகையில் ஈடுபடும் குழுவினருக்கு வரும் சந்தேகங்களுக்கு தொலைபேசி வாயிலாக பதிலளிக்க மேலும் பலா் நியமிக்கப்பட்டுள்ளனா் என்றும் அவா்கள் கூறினா்.