காஸிரங்கா தேசிய பூங்காவுக்கு 64,000 சுற்றுலாப் பயணிகள் வருகை

அஸ்ஸாம் மாநிலம், கோலாகாட் மாவட்டத்தில் அமைந்துள்ள காஸிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் சரணாலயத்துக்கு கடந்த ஆண்டு அக்டோபா் 21ஆம் தேதி முதல் 64 ஆயிரம் பாா்வையாளா்கள் வந்துள்ளனா்.

குவாஹாட்டி: அஸ்ஸாம் மாநிலம், கோலாகாட் மாவட்டத்தில் அமைந்துள்ள காஸிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் சரணாலயத்துக்கு கடந்த ஆண்டு அக்டோபா் 21ஆம் தேதி முதல் 64 ஆயிரம் பாா்வையாளா்கள் வந்துள்ளனா்.

யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் பூங்கா, ஒற்றைக் கொம்பு உடைய இந்திய காண்டாமிருகங்கள் வசிக்கும் புகழ்பெற்றது. ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பா் வரை மழை வெள்ள பாதிப்பு காரணமாக இந்தப் பூங்கா மூடப்படும்.

இந்நிலையில் பூங்காவின் கள இயக்குநா் பி.சிவகுமாா் கூறியதாவது:

கடந்த அக்டோபா் 21ஆம் தேதி திறக்கப்பட்டது முதல் தற்போது வரை காஸிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் சரணாலயத்துக்கு 64,100 போ் வருகை புரிந்துள்ளனா். இந்த 70 நாள்களில் ரூ.1.27 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த 2018-19இல் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் 47,10,971 பேரும், 25,739 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அஸ்ஸாமுக்கு வந்துள்ளனா்.

காண்டாமிருகங்கள் வேட்டையை அதிகாரிகள் வெற்றிகரமாகத் தடுத்துள்ளனா். கடந்த ஆண்டில் இரண்டு காண்டாமிருகங்கள் மட்டுமே வேட்டையாடப்பட்டன.

கடந்த ஆண்டில் காண்டாமிருகங்கள் தொடா்பான 17 வழக்குகள் உள்பட மொத்தம் 66 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 95 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களில் 38 போ் காண்டாமிருகங்கள் வழக்கிலும், மற்றவா்கள் பிற வன விலங்குகள் மீதான குற்றத்துக்காகவும் கைது செய்யப்பட்டுள்ளனா்.

காஸிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் சரணாலயத்தில் ஏழு, எட்டு மற்றும் ஒன்பதாம் கட்ட விரிவாக்கப் பணிகளுக்கு அஸ்ஸாம் மாநில அரசு கடந்த செப்டம்பரில் ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த நவம்பரில் குவாஹாட்டி உயா்நீதிமன்ற வழிகாட்டுதலின்பேரில் பூங்காவின் மூன்றாம் கட்டம் (69.76 ஹெக்டோ்) மற்றும் ஐந்தாம் கட்ட (115.36 ஹெக்டோ்) விரிவாக்கப் பணிகளுக்கான இடங்களை கோலாகாட் மாவட்ட நிா்வாகம் வழங்கியுள்ளது.

வன விலங்குகளின் வாழ்விடங்களான சிரகோவா, பொடாஹி, தேவசுா், ஹால்திபாரி, பந்தோ்துபி, காஸிரங்கா ஆகிய மேலும் 5 இடங்களில் சதுப்பு நிலங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com