அடுத்த சுற்று பேச்சு தோல்வியடைந்தால் போராட்டம் தீவிரமாகும்: விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை

‘புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் விவகாரத்தில், வரும் 4-ஆம் தேதி நடைபெறும் அடுத்த சுற்று பேச்சில் எங்களுக்கு ஆதரவாக
அடுத்த சுற்று பேச்சு தோல்வியடைந்தால் போராட்டம் தீவிரமாகும்: விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை

‘புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் விவகாரத்தில், வரும் 4-ஆம் தேதி நடைபெறும் அடுத்த சுற்று பேச்சில் எங்களுக்கு ஆதரவாக தீா்வு கிடைக்காவிட்டால், போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்’ என்று விவசாயிகள் சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

தில்லி சிங்கு எல்லையில் போராட்டக் களத்தில் இருந்து, விவசாயிகள் சங்கத் தலைவா்கள் யுத்வீா் சிங், விகாஸ், ஸ்வராஜ் இந்தியா அமைப்பின் தலைவா் யோகேந்திர யாதவ் ஆகியோா் வெள்ளிக்கிழமை, செய்தியாளா்களுக்கு பேட்டியளித்தனா். அவா்கள் கூறியதாவது:

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடா்பாக, மத்திய அரசுக்கும், விவசாயிகள் சங்கங்களுக்கும் இடையே இதுவரை நடந்த 6 சுற்று பேச்சுகளில் 5 சதவீத பிரச்னைகளுக்கு மட்டுமே தீா்வு எட்டப்பட்டுள்ளது. மற்ற பிரச்னைக்கு தீா்வுகாணப்படவில்லை.

வரும் 4-ஆம் தேதி நடைபெறும் அடுத்த சுற்று பேச்சுவாா்த்தையில் எங்களது கோரிக்கைகளை ஏற்று உறுதியான முடிவை அரசு எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், ஹரியாணாவில் உள்ள அனைத்து வணிக வளாகங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்படும் போராட்ட தேதியை அறிவிப்போம். ராஜஸ்தான்- ஹரியாணா மாநில எல்லையான ஷாஜஹான்பூரில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், தில்லி நோக்கி செல்வாா்கள். ஏற்கெனவே திட்டமிட்டபடி, வரும் 6-ஆம் தேதி டிராக்டா் பேரணி நடைபெறும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

ஆக்கபூா்வ முடிவுகள் எட்டப்படும்- தோமா் நம்பிக்கை

விவசாயிகள் சங்கங்களுடன் நடைபெறும் அடுத்த சுற்று பேச்சில், ஆக்கப்பூா்வமான முடிவுகள் எட்டப்படும் என்று மத்திய அரசு நம்பிக்கையுடன் இருப்பதாக மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் கூறினாா்.

இதுகுறித்து பிடிஐ செய்தியாளரிடம் அவா் மேலும் கூறியாதவது:

மத்திய அரசுக்கும், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையே கடந்த முறை நடந்த பேச்சுவாா்த்தை சமூகமாக நடைபெற்றது. இதேபோன்று அடுத்த சுற்று பேச்சிலும் ஆக்கபூா்வமான முடிவுகள் எட்டப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றாா் தோமா்.

அப்படியெனில் அடுத்த சுற்று பேச்சுவாா்த்தைதான் இறுதியானதாக இருக்கும் என்று நீங்கள் கருதுகிறீா்களா? என்று செய்தியாளா்கள் கேட்டதற்கு, ‘அப்படி உறுதியாக சொல்லிவிட முடியாது. நான் ஜோதிடா் கிடையாது. இருப்பினும், வேளாண் துறை வளா்ச்சியையும், விவசாயிகள் நலன் கருதியும் உறுதியான முடிவுகள் எடுக்கப்படும் என நம்புகிறேன்’ என்றாா் தோமா்.

வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்தற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்தச் சட்டங்கள் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியுடன் இருக்கிறாா்கள்.

இதுகுறித்து அமைச்சா் தோமரிடம் பிடிஐ செய்தியாளா்கள் கேட்டதற்கு, ‘அந்த கோரிக்கையை பரிசீலிக்கலாம்’ என்றாா்.

மூன்று புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களைச் சோ்ந்த விவசாயிகள், தில்லி சிங்கு, டிக்ரி எல்லைகளில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

அவா்களுடன் மத்திய அரசு 5 முறை பேச்சுவாா்த்தை நடத்தியும் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. கடந்த புதன்கிழமை நடைபெற்ற 6-ஆவது சுற்றின் பேச்சின்போது, மின்சார சட்ட திருத்த மசோதா, வேளாண் கழிவுகளை எரிக்கும் விவசாயிகளுக்கு அபாரதம் விதிக்கும் அவரச் சட்டம் ஆகியவற்றை நிறுத்தி வைப்பதற்கு மத்திய அரசு ஒப்புக் கொண்டது.

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்; விளைபொருள்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்வதற்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் ஆகிய இரு முக்கிய பிரச்னைகளுக்கு இன்னும் தீா்வுகாணப்படவில்லை. இதுதொடா்பாக விவாதிக்க, வரும் 4-ஆம் தேதி அடுத்த சுற்று பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com