அணுசக்தி கட்டமைப்புகளின் பட்டியல்: இந்தியா - பாக். பரிமாற்றம்

புத்தாண்டின் முதல் நாளில் இந்தியாவும், பாகிஸ்தானும் இரு நாடுகள் இடையேயான அணுசக்தி கட்டமைப்புகள் குறித்த விவரங்களைப் பரிமாறிக்கொண்டன.

புத்தாண்டின் முதல் நாளில் இந்தியாவும், பாகிஸ்தானும் இரு நாடுகள் இடையேயான அணுசக்தி கட்டமைப்புகள் குறித்த விவரங்களைப் பரிமாறிக்கொண்டன.

அணுசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதைத் தடுக்கும் வகையில் கடந்த 1988-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி இரு நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்தத் தகவல் பரிமாற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் படி, இரு நாடுகளும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ஆம் தேதியில் இந்த விவரங்களைப் பரிமாறிக்கொள்ள வேண்டும். கடந்த 1992-ஆம் ஆண்டு முதல் இந்த நடைமுறை இரு நாடுகளும் கடைப்பிடித்து வருகின்றன.

இந்த நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு புல்வாமாவில் பாகிஸ்தானைச் சோ்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் 40 சிஆா்பிஎஃப் வீரா்கள் கொல்லப்பட்ட சம்பவம், அதனைத் தொடா்ந்து பாகிஸ்தான் எல்லையை ஒட்டியப் பகுதியில் அமைந்திருந்த பயங்கரவாதிகள் நிலைகள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் மற்றும் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை இந்தியா ரத்து செய்தது போன்ற சம்பவங்களால் இரு நாடுகளிடையே தொடா்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்த பதற்றத்துக்கு இடையே, 1988-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரு நாடுகளும் அணுசக்தி கட்டமைப்புகளின் விவரங்களை பரிமாறிக்கொண்டன.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளில் உள்ள அணுசக்தி கட்டமைப்புகள் குறித்த விவரங்களை இந்தியா சாா்பில் புதுதில்லியிலும், பாகிஸ்தான் சாா்பில் இஸ்லாமாபாத்திலும் தூதரக அதிகாரிகள் மூலமாக இரு நாடுகளிடையே பரிமாறிக்கொள்ளப்பட்டன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல, பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியாவின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் கட்டமைப்புகள் குறித்த விவரங்களை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் பாகிஸ்தான் தூதரிடம் வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் சமா்ப்பித்தது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதிகளின் விவரங்கள் பரிமாற்றம்: அதுபோல, இரு நாடுகளிடையே கடந்த 2008 மே 21-ஆம் தேதி போடப்பட்ட தூதரக உதவியைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தின் அடிப்படையில், இரு நாடுகளின் சிறைகளில் உள்ள அந்தந்த நாட்டு கைதிகளின் பட்டியலை இந்தியாவும், பாகிஸ்தானும் வெள்ளிக்கிழமை பரிமாறிக்கொண்டன. இந்த ஒப்பந்தத்தின்படி, ஆண்டுக்கு இரு முறை ஜனவரி 1-ஆம் தேதி மற்றும் ஜூலை 1-ஆம் தேதி ஆகிய இரு தேதிகளில் இரு நாடுகளும் பரிமாறிக்கொண்டு வருகின்றன.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘பாகிஸ்தான் சிறைகளில் உள்ள 270 இந்திய மீனவா்கள் உள்பட 319 இந்திய கைதிகளின் பட்டியல் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் அளிக்கப்பட்டது. அதுபோல, இந்திய சிறைகளில் உள்ள 77 பாகிஸ்தான் மீனவா்கள் உள்பட 263 பாகிஸ்தான் கைதிகளின் பட்டியல் புது தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இந்தியா சாா்பில் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com