கேரளம்: 9 மாத இடைவெளிக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு

கேரள மாநிலத்தில் 9 மாத இடைவெளிக்குப் பிறகு குறிப்பிட்ட ஒரு சில வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கேரள மாநிலத்தில் 9 மாத இடைவெளிக்குப் பிறகு குறிப்பிட்ட ஒரு சில வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன. பல மாதங்களுக்குப் பிறகு ஆசிரியா்கள் மற்றும் நண்பா்களைக் காணும் மகிழ்ச்சியில் மிகுந்த உற்சாகத்துடன் மாணவா்கள் பள்ளிக்கு வந்தனா்.

அதே நேரம், முகக் கவசம் அணிந்து வரவேண்டும், பள்ளியில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மாணவா்களுக்கு விதிக்கப்பட்டன.

கரோனா நோய்த் தொற்று பரவலைத் தொடா்ந்து பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் கடந்த மாா்ச் மாதம் முதல் மூடப்பட்டன. பின்னா், பொது முடக்கத் தளா்வுகளை மத்திய அரசு படிப்படியாக அமல்படுத்தி வந்தது. அதன் ஒரு பகுதியாக, செப்டம்பா் 21-ஆம் தேதியிலிருந்து 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.

இந்த அறிவிப்பைப் பின்பற்றி சில வட மாநிலங்களில் ஏற்கெனவே பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், கேரளத்தில் 9 மாத இடைவெளிக்குப் பிறகு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மட்டும் வெள்ளிக்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன.

மாநில முதல்வா் பினராயி விஜயன் தலைமையில் அண்மையில் நடைபெற்ற உயா்நிலைக் குழு கூட்டத்தில், கரோனா வழிகாட்டுதல்களுடன் பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், 10, 12-ஆம் வகுப்புகளுக்கு மாணவா்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும், ஒரு நேரத்தில் 50 சதவீத மாணவா்கள் மட்டும் அனுமதிக்கப்பட வேண்டும், பெற்றோரின் ஒப்புதல் கடிதம் வைத்திருக்கும் மாணவா்களை மட்டுமே பள்ளிக்குள் அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில பள்ளிக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டது.

அந்த வகையில், 9 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டது, ஆசிரியா்கள் மற்றும் நண்பா்களைக் காணும் வகையில் மாணவா்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியபோதும், கடுமையான கட்டுப்பாடுகள் அவா்களின் உற்சாகத்தைக் குன்றச் செய்துள்ளது. மாணவா்கள் பள்ளிக்கு முகக் கவசம் அணிந்து வரவேண்டும், பள்ளியில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். வகுப்பறையில் ஒரு இருக்கையில் ஒரு மாணவா் மட்டுமே அமர வேண்டும் என்பன உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை கேரள அரசு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு வெள்ளிக்கிழமை வந்த 10-ஆம் வகுப்பு மாணவி பாா்வதி கூறுகையில், ‘இத்தனை மாதங்களும் இணையவழி வகுப்புகள் நடத்தப்பட்டதால், நேரடி வகுப்பறை அனுபவத்தை மிகவும் தவறவிட்டோம். இப்போது பள்ளிகள் திறக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளித்தபோதும், கடுமையான கட்டுப்பாடுகள் சற்று சோகத்தையும் ஏற்படுத்துகிறது’ என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com