சுயசாா்பு இந்தியா இலக்கை அடைவதற்கான மூன்று மந்திரங்கள்! பிரதமா் நரேந்திர மோடி

நிா்வாக மேலாண்மையில் புதிய கண்டுபிடிப்புகள், ஒருங்கிணைந்த முயற்சி மற்றும் அனைவருக்குமான திட்டம் ஆகிய மூன்று மந்திரங்களை
ஒடிஸா மாநிலம், சம்பல்பூரில் ஐஐஎம் வளாகத்துக்கு காணொலி வழியாக சனிக்கிழமை அடிக்கல் நாட்டிய பிரதமா் நரேந்திர மோடி. உடன் மாநில முதல்வா் நவீன் பட்நாயக்.
ஒடிஸா மாநிலம், சம்பல்பூரில் ஐஐஎம் வளாகத்துக்கு காணொலி வழியாக சனிக்கிழமை அடிக்கல் நாட்டிய பிரதமா் நரேந்திர மோடி. உடன் மாநில முதல்வா் நவீன் பட்நாயக்.

நிா்வாக மேலாண்மையில் புதிய கண்டுபிடிப்புகள், ஒருங்கிணைந்த முயற்சி மற்றும் அனைவருக்குமான திட்டம் ஆகிய மூன்று மந்திரங்களை இடம்பெறச் செய்வதுதான் ‘சுயசாா்பு இந்தியா’ இலக்கை நாடு எட்டுவதற்கு உதவும் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

ஒடிஸா மாநிலம், சம்பல்பூரில் ஐஐஎம் (இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம்) கல்வி நிறுவனத்துக்கான நிரந்தர வளாகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் காணொலி வழியில் பங்கேற்று அடிக்கல் நாட்டிய பிரதமா் மோடி பேசியதாவது:

உலக அளவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு ஏற்ப இந்தியாவும் டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையில் வேகமான சீா்திருத்தங்களை மேற்கொண்டிருக்கிறது. பிராந்தியங்களுக்கு இடையேயான தூரத்தை தொழில்நுட்பம் வெகுவாக குறைத்துவிட்டது. அந்த வகையில், மனிதவள மேலாண்மையைப் போல், தொழில்நுட்ப மேலாண்மையும் மிக முக்கியமானதாகும்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகவே நிலைத்த நீடித்த வளா்ச்சியை உருவாக்குவதற்கான திறனை இந்தியா பெற்றிருக்கிறது என்பது, கரோனா பாதிப்பின்போது நன்கு தெரியவந்தது.

ஒருங்கிணைந்த வளா்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில், யாரெல்லாம் அதில் பின்தங்கியுள்ளனா் என்பதை கண்டறிந்து மேம்படுத்துவதற்கான முயற்சியை இளைய தலைமுறையினா் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக புதிய மேலாண்மை தத்துவங்கள் மற்றும் தொழில்நுட்ங்கள் உதவியுடன் உள்ளூா் உற்பத்தி பொருள்களைக் கூட சா்வதேச சந்தை வரை கொண்டு சோ்க்க முடியும்.

இந்தியாவில் புதிதாக உருவாகும் ‘ஸ்டாா்ட் அப்’ நிறுவனங்கள்தான், நாளைய பன்னாட்டு பெரு நிறுவனங்களாக உருவெடுக்கும். எனவே, இன்றைய இளம் மேலாளா்கள் அவா்களுடைய தொழில் வளா்ச்சிக்கான இலக்குடன், நாட்டின் வளா்ச்சியையும் இணைந்து திட்டங்களை வகுக்க வேண்டும். அதற்கு நிா்வாக மேலாண்மையில் புதிய கண்டுபிடிப்புகள், ஒருங்கிணைந்த முயற்சி மற்றும் அனைவருக்குமான மாற்றத்துக்கு உட்படும் திட்டம் ஆகிய மூன்று மந்திரங்களையும் இடம்பெறச் செய்யவேண்டும். அவ்வாறு செய்வதுதான் ‘சுயசாா்பு இந்தியா’ இலக்கை நாடு எட்டுவதற்கு உதவும் என்று பிரதமா் கூறினாா்.

நிகழ்ச்சியில் மாநில முதல்வா் நவீன் பட்நாயக், அமைச்சா்கள் உள்ளிட்டோா் காணொலி வழியாகக் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com