ஜிஎஸ்டி வசூல் ரூ.1.15 லட்சம் கோடியாக அதிகரித்து வரலாற்று சாதனை

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் கடந்த டிசம்பா் மாதத்தில் ரூ.1.15 லட்சம் கோடியாக அதிகரித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் கடந்த டிசம்பா் மாதத்தில் ரூ.1.15 லட்சம் கோடியாக அதிகரித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இது குறித்து மத்திய நிதி அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடுமையான பொது முடக்கத்துக்குப் பிறகு நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளா்ச்சி கண்டு வருவதை கோடிட்டுக் காட்டும் வகையில் சென்ற டிசம்பா் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.15 லட்சம் கோடியாக அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் தொடா்ச்சியாக மூன்றாவது மாதமாக சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ரூ.1 லட்சம் கோடிக்கும் மேல் அதிகரித்தது வளா்ச்சிக்கான நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது.

2020 டிசம்பரின் ரூ.1,15,174 கோடி ஜிஎஸ்டி வசூலை சென்ற 2019 டிசம்பரின் ஜிஎஸ்டி வசூலான ரூ.1.03 லட்சம் கோடியுடன் ஒப்பிடும்போது 12 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

நவம்பா்-டிசம்பா் 31 வரையில் ஜிஎஸ்டிஆா்-3பி படிவங்களில் 87 லட்சம் போ் வரி கணக்குகளைத் தாக்கல் செய்துள்ளனா்.

கடந்த 2017 ஜூலை 1-இல் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு 2019 ஏப்ரலில் வசூலான ரூ.1,13,866 கோடிதான் இதுவரையில் அதிகபட்ச ஜிஎஸ்டி அளவாகக் கருதப்பட்டு வந்தது. இந்த நிலையில், 2020 டிசம்பரில் ஜிஎஸ்டி வசூல் அதனை விஞ்சி சாதனை படைத்துள்ளது.

கடந்த டிசம்பரில் வசூலான மொத்த ஜிஎஸ்டியில் மத்திய ஜிஎஸ்டியின் பங்கு ரூ.21,365 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி ரூ.27,804 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியின் பங்கு ரூ.57,426 கோடியாகவும் (சரக்கு இறக்குமதி வரி வசூல் ரூ.27,050 கோடி உள்பட), கூடுதல் வரி (செஸ்) ரூ.8,579 கோடியாகவும் (இறக்குமதி வரி ரூ.971 கோடி உள்பட) இருந்தது என நிதி அமைச்சகம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com