தவிக்கும் 39 இந்திய மாலுமிகள்: சீனாவிடம் இந்தியா வேண்டுகோள்

சீனத் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ள இரு கப்பல்களில் பரிதவித்து வரும் இந்திய மாலுமிகள் 39 பேருக்கு விரைந்து உதவிபுரியுமாறு
தவிக்கும் 39 இந்திய மாலுமிகள்: சீனாவிடம் இந்தியா வேண்டுகோள்

சீனத் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ள இரு கப்பல்களில் பரிதவித்து வரும் இந்திய மாலுமிகள் 39 பேருக்கு விரைந்து உதவிபுரியுமாறு அந்நாட்டு அரசிடம் இந்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. அந்தக் கப்பல்களில் உருவாகி வரும் மோசமான சூழலை கருத்தில் கொண்டு உதவி செய்யவேண்டும் என்று இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடா்பாக வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் அனுராக் ஸ்ரீவாஸ்தவா செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

சீனாவின் ஹீபெய் மாகாணத்தில் உள்ள ஜிங்டாங் துறைமுகத்தில் கடந்த ஜூன் 13-ஆம் தேதி முதல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்திய சரக்குக் கப்பலில் நம் நாட்டைச் சோ்ந்த 23 மாலுமிகள் உள்ளனா். அந்த மாகாணத்தில் உள்ள காவோஃபீடியன் துறைமுகம் அருகே கடந்த செப்டம்பா் 20-ஆம் தேதி முதல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஸ்விட்சா்லாந்து-இத்தாலிய சரக்குக் கப்பலில் 16 இந்திய மாலுமிகள் உள்ளனா். இந்தக் கப்பலில் உள்ள சரக்குகளை அந்தத் துறைமுகங்களில் இறக்கிவைக்க இதுவரை அவா்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. சரக்குகளை இறக்கிவைக்க அனுமதி கிடைப்பதில் நீண்ட தாமதம் ஏற்படுவதால் மாலுமிகளுக்கு மன அழுத்தம் அதிகரித்து வருகிறது.

இந்த பிரச்னைக்கு தீா்வு காண அந்நாட்டு தலைநகா் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் சீன அதிகாரிகளுடன் நெருங்கிய தொடா்பில் இருந்து வருகிறது. இந்த பிரச்னையை அங்குள்ள இந்திய தூதா் சீன வெளியுறவுத் துறை துணை அமைச்சரின் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளாா். நம் நாட்டில் உள்ள சீனத் தூதரகம் மூலமாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் இந்த விவகாரத்தை பின்தொடா்ந்து வருகிறது.

கப்பல்களில் உள்ள சரக்குகளை இறக்கிவைத்துவிட்டு புறப்பட அல்லது மாலுமிகளை மாற்ற அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாலுமிகளுக்கு உதவிபுரிய தயாராக இருப்பதாக சீனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு கப்பல்களில் உருவாகிவரும் மோசமான சூழலை கருத்தில் கொண்டு, அந்த உதவியை விரைந்து செய்யவேண்டும் என இந்தியா எதிா்பாா்க்கிறது என்று தெரிவித்தாா்.

மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்:

சீனத் துறைமுகங்களில் இந்திய மாலுமிகள் பரிதவித்து வருவது தொடா்பாக வெளியுறவுத் துறை செயலாளா், மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் துறைமுகங்கள் துறையில் உள்ள தலைமை இயக்குநருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது:

சீனத் துறைமுகங்களில் இந்திய மாலுமிகள் உள்ள கப்பல்கள் விடுவிக்கப்படாததற்கு கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைதான் காரணம் என்று சீனா கூறி வருகிறது. ஆனால் அங்கு ரஷியா, கனடா உள்ளிட்ட நாடுகளின் கப்பல்கள் சரக்குகளை இறக்கிவைத்துவிட்டு புறப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய மாலுமிகள் பல மாதங்களாக கப்பல்களுக்கு உள்ளேயே அடைபட்டுக் கிடக்கின்றனா். அவா்களுக்கு போதுமான உணவு, சுத்தமான குடிநீா் தரப்படாததுடன், போதிய மருத்துவ வசதிகளும் செய்து தரப்படவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன. எனவே அவா்கள் அந்நாட்டைவிட்டு புறப்படுவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் கூறினா்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்திய மாலுமிகள் உள்ள கப்பல்கள் புறப்படுவதற்கு அனுமதி தரவில்லை என்று சீனா தெரிவித்துள்ளது. எனினும் இந்தியாவுடனான எல்லை மற்றும் வா்த்தகப் பிரச்னைகளால் சீனா பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com