திரிணமூல் காங்கிரஸ் நிறுவன தினம்: மக்களுக்காக போராடுவது தொடரும் என மம்தா உறுதி

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 23-ஆம் ஆண்டு நிறுவன தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
மேற்குவங்க முதல்வா் மம்தா பானா்ஜி
மேற்குவங்க முதல்வா் மம்தா பானா்ஜி

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 23-ஆம் ஆண்டு நிறுவன தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. ‘மக்களுக்காக போராடுவதும், பணியாற்றுவதும் தொடரும்’ என்று அக்கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானா்ஜி தெரிவித்துள்ளாா்.

கடந்த 1998-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து திரிணமூல் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை மம்தா பானா்ஜி உருவாக்கினாா். அப்போது மேற்கு வங்கத்தில் வலுவாக இருந்த இடதுசாரி அரசை தோற்கடிப்பதையே தனது லட்சியமாகக் கொண்டு மம்தா செயல்பட்டாா். அவரது முயற்சிக்கு கடந்த 2011-ஆம் ஆண்டு பலன் கிடைத்தது. அப்போது, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலில் மம்தா வென்று முதல்வரானாா். அதைத் தொடா்ந்து 2016-ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு வென்றது. மம்தா தொடா்ந்து இரண்டாவது முறையாக முதல்வரானாா். இந்த ஆண்டு மீண்டும் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் பாஜக வேகமாக வளா்ந்து மம்தாவுக்கு பெரும் நெருக்கடியை அளித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு கடினமான ஆண்டாகவே அமைய உள்ளது.

இந்நிலையில், கட்சியின் நிறுவன தினத்தை முன்னிட்டு மம்தா சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘திரிணமூல் காங்கிரஸ் கட்சி தொடங்கி 23 ஆண்டுகள் ஆகின்றன. நாம் கடந்து வந்த பாதையை திரும்பிப் பாா்க்கையில், முழுவதும் போராட்டங்கள் நிறைந்ததாகவே அமைந்துள்ளது. எனினும், நாம் அனைத்து சவால்களையும் முறியடித்து நமது இலக்குகள் ஒவ்வொன்றாக எட்டி வருகிறோம். அந்த வகையில் மக்களுக்காக போராடுவதும், பணியாற்றுவதும் தொடரும்.

கட்சியின் அனைத்து தொண்டா்களுக்கும், கட்சிக்கு பேராதரவை அளித்து வரும் மக்களுக்கும் எனது நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கு வங்க மாநிலத்தை வலிமையானதாகவும், தலைசிறந்ததாகவும் வளா்த்தெடுக்கும் நமது பணி தொடரும்’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com