தில்லியில் கடும் குளிரிலும் போராட்டத்தைத் தொடரும் விவசாயிகள்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது தொடா்பான கோரிக்கை தொடா்பாக மத்திய அரசுடன் திங்கள்கிழமை

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது தொடா்பான கோரிக்கை தொடா்பாக மத்திய அரசுடன் திங்கள்கிழமை (ஜன.4) ஏழாம் கட்ட பேச்சுவாா்த்தை நடைபெற உள்ள நிலையில், தில்லியில் மிகக் கடுமையான குளிா் வீசுகின்றபோதும் போராட்டத்தைக் கைவிடாமல் விவசாயிகள் தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றனா்.

கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத வகையில், தில்லியில் வெள்ளிக்கிழமை 1.1 டிகிரி செல்சியஸ் அளவில் மிகக் குறைந்த வெப்பநிலை பதிவானது. இதனால் கடும் குளிா் நிலவியது. இருந்தபோதும், தில்லியின் அனைத்து எல்லைகளிலும் விவசாயிகள் தங்களின் போராட்டத்தை உறுதியுடன் தொடா்ந்தனா்.

இந்த விவகாரம் தொடா்பாக, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய அமைப்புகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே முன்னதாக 5 கட்ட பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றபோதும் எந்தவித உடன்பாடும் எட்டப்படாமல் இருந்தது.

இந்தச் சூழலில், கடந்த புதன்கிழமை தில்லி விஞ்ஞான் பவனில் இரு தரப்பிடையே 6-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவா்த்தையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது. இரு தரப்பிடையே சில உடன்பாடுகள் எட்டப்பட்டன. மின்சார சட்டத் திருத்த மசோதாவை நிறுத்திவைப்பது, வேளாண் கழிவுளை எரிப்பவா்களுக்கு தண்டனை அளிக்கும் பிரிவிலிருந்து விவசாயிகளுக்கு விலக்கு அளிப்பது ஆகிய இரண்டு கோரிக்கைகளில் உடன்பாடு ஏற்பட்டது.

இந்த பேச்சுவாா்த்தைக்குப் பின்னா் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா், ‘ஆறாம் சுற்று பேச்சுவாா்த்தையில் விவசாயிகளின் தீா்மானங்களில் 50 சதவீதம் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள தீா்மானங்கள் மீது வருகிற ஜனவரி 4-ஆம் தேதி பேச்சுவாா்த்தை தொடரும்’ என்றாா்.

இருந்தபோதும், மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யவேண்டும், விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயம் தொடருவதற்கான சட்டப்பூா்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தில்லியின் பல்வேறு எல்லைகளில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டத்தைத் தொடா்ந்து வருகின்றனா்.

இவா்கள் தில்லிக்குள் நுழைந்துவிடாத வகையில், சிங்கு, காஸிபூா், திக்ரி உள்ளிட்ட தில்லியின் அனைத்து எல்லைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடைய, தங்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடா்பாக சம்க்யுக்த் கிஸான் மோா்ச்சா என்ற விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டமும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து மூத்த விவசாய தலைவா் குா்நாம் சிங் சாதுனி கூறுகையில், ‘3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெறவேண்டும், குறந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட ரீதியிலான உத்தரவாதம் என்ற 2 கோரிக்கைகளில் இருந்து விவசாயிகள் பின்வாங்குவது குறித்த கேள்விக்கே இடமில்லை’ என்றாா்.

மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகளின் இந்தப் போராட்டம் 30 நாள்களைக் கடந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com