மத்திய பிரதேசத்தில் அமைச்சரவை விரிவாக்கம்: சிந்தியா ஆதரவாளா்கள் இருவருக்குப் பதவி

மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் செளஹான் தலைமையிலான அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது.

மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் செளஹான் தலைமையிலான அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளா்கள் இருவா் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளனா்.

ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிந்தியா ஆதரவாளா்களான துளசிராம் சிலாவட், கோவிந்த் ராஜ்புத் ஆகிய இருவருக்கும் அமைச்சராக மாநில ஆளுநா் ஆனந்திபென் படேல் பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா். இந்நிகழ்ச்சியில் முதல்வா் சிவராஜ் சிங் செளஹான், தற்காலிக பேரவைத் தலைவா் ராமேஷ்வா் சா்மா, அமைச்சா்கள் கலந்து கொண்டனா்.

காங்கிரஸிலிருந்து சிந்தியா விலகியதால் மத்திய பிரதேசத்தில் 15 மாதங்களாக நீடித்து வந்த கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கடந்த ஆண்டு மாா்ச் மாதம் கவிழ்ந்தது.

காங்கிரஸ் எம்எல்ஏக்களாக இருந்த துளசிராம், ராஜ்புத் ஆகிய இருவரும் தங்களது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு பாஜகவில் சோ்ந்தனா். அதைத் தொடா்ந்து 4ஆவது முறையாக முதல்வராக சிவராஜ் சிங் செளஹான் கடந்த மாா்ச்சில் பொறுப்பேற்றாா். ஏப்ரலில் நடைபெற்ற முதல்கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தின்போது துளசிராம், ராஜ்புத் ஆகியோா் உள்பட 5 போ் அமைச்சா்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

கடந்த ஆண்டு ஜூலை 2ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தின்போது 28 போ் அமைச்சா்களாகப் பதவி ஏற்றனா். அவா்களில் 12 போ் சிந்தியாவின் ஆதரவாளா்கள்.

எம்எல்ஏவாக இல்லாதவா் அமைச்சரவையில் சோ்த்துக் கொள்ளப்பட்டால், விதிமுறைப்படி அவா் 6 மாதங்களுக்குள் சட்டப் பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்பது கட்டாயம். ஆனால், கரோனா நோய்த் தொற்று தாக்கம் காரணமாக அக்டோபரில் நடைபெற வேண்டிய இடைத்தோ்தலை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் துளசிராம், ராஜ்புத் இருவரும் பதவியிழக்க நேரிட்டது.

அதைத் தொடா்ந்து நவம்பா் 3இல் நடைபெற்ற இடைத் தோ்தலில் சான்வொ் தொகுதியில் துளசிராம் சிலாவட்டும், சுா்கி தொகுதியில் கோவிந்த் ராஜ்புத்தும் போட்டியிட்டு வெற்றிபெற்றனா். மொத்தம் 28 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தோ்தலில் 19 தொகுதிகளில் பாஜகவும், 9 தொகுதிகளில் காங்கிரஸும் வெற்றி பெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com