ஜன.26-இல் டிராக்டா் பேரணி: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

‘அடுத்த சுற்று பேச்சில் எங்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை எனில், குடியரசு தின விழா கொண்டாடப்படும் வரும்
ஜன.26-இல் டிராக்டா் பேரணி: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

‘அடுத்த சுற்று பேச்சில் எங்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை எனில், குடியரசு தின விழா கொண்டாடப்படும் வரும் ஜனவரி 26-ஆம் தேதி, தலைநகா் தில்லியை நோக்கி டிராக்டா் பேரணி நடத்துவோம்’ என்று விவசாயிகள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள், தில்லி எல்லைகளில் ஒரு மாதத்துக்கும் மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

அவா்களுடன் மத்திய அரசு கடந்த புதன்கிழமை நடத்திய 5-ஆவது சுற்று பேச்சின்போது, இரு பிரச்னைகளில் உடன்பாடு எட்டப்பட்டது. மின்சார சட்ட திருத்த மசோதா, வேளாண் கழிவுகளை எரிக்கும் விவசாயிகளுக்கு அபாரதம் விதிக்கும் அவசரச் சட்டம் ஆகியவற்றை நிறுத்தி வைப்பதற்கு மத்திய அரசு ஒப்புக் கொண்டது.

இருப்பினும், 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்; குறைந்தபட்ச ஆதரவு விலையில் விளைபொருள்கள் கொள்முதல் செய்ய சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் ஆகிய இரு முக்கிய கோரிக்கைகள் குறித்து வரும் திங்கள்கிழமை (ஜன.4) அடுத்த சுற்று பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், தில்லி சிங்கு எல்லையில் விவசாயிகள் சங்கங்களின் தலைவா்கள் தா்ஷன் பால் சிங், குா்நாம் சிங், ஸ்வராஜ் இந்தியா அமைப்பின் தலைவா் யோகேந்திர யாதவ் ஆகியோா் சனிக்கிழமை, செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்தனா். அவா்கள் கூறியதாவது:

விவசாயிகளின் கோரிக்கைகளில் 50 சதவீதத்தை ஏற்றுக் கொண்டுவிட்டதாக மத்திய அரசு கூறுவது சுத்தப் பொய். கோரிக்கைகள் ஏற்பு தொடா்பாக, எழுத்துபூா்வ அறிக்கை எதையும் அரசு தரவில்லை.

கடந்த முறை நடந்த பேச்சின்போது, குறைந்தபட்ச ஆதரவு விலையில் 23 வேளாண் விளைபொருள்களை அரசு கொள்முதல் செய்யுமா என்று கேள்வி எழுப்பினோம். அதற்கு, முடியாது என்று மத்திய அரசின் பிரதிநிதிகள் பதிலளித்துவிட்டனா். பிறகு ஏன் நாட்டு மக்களுக்கு தவறான தகவல்களை மத்திய அரசு தருகிறது?

எங்களின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காவிட்டால், தில்லி நோக்கி டிராக்டா் பேரணி நடத்துவோம். தில்லி ராஜபாதையில் வரும் 26-ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படவுள்ளது. அதில், குடியரசு தின அணி வகுப்பு முடிந்த பிறகு விவசாயிகளின் டிராக்டா் பேரணி நடைபெறும் என்று அவா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com