நாட்டின் ஏற்றுமதியில் சரிவு நிலை: வா்த்தக பற்றாக்குறை 1,571 கோடி டாலராக அதிகரிப்பு

நாட்டின் ஏற்றுமதி தொடா்ந்து மூன்றாவது மாதமாக 2020 டிசம்பரிலும் 0.8 சதவீதம் குறைந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாட்டின் ஏற்றுமதி தொடா்ந்து மூன்றாவது மாதமாக 2020 டிசம்பரிலும் 0.8 சதவீதம் குறைந்துள்ளது.

இதுகுறித்து மத்திய வா்த்தக அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:

நாட்டின் ஏற்றுமதி கடந்த டிசம்பரில் 2,689 கோடி டாலராக இருந்தது. இது, 2019 டிசம்பரில் ஏற்றுமதியான 2,711 கோடி டாலருடன் ஒப்பிடுகையில் 0.8 சதவீதம் சற்று குறைவாகும்.

இறக்குமதி அதிகரித்ததையடுத்து வா்த்தக பற்றாக்குறை 1,571 கோடி டாலரைத் தொட்டுள்ளது.

கட்டுக்குள் வந்த சரிவு:

2020 நவம்பரில் நாட்டின் ஏற்றுமதி 8.74 சதவீத சரிவைச் சந்தித்திருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் டிசம்பரில் இந்த பின்னடைவு ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது. இதற்கு, நவரத்தினங்கள், ஆபரணங்கள், பொறியியல் சாதனம், ரசாயனம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில துறைகளின் ஏற்றுமதி சிறப்பான அளவில் ஏற்றம் கண்டதே முக்கிய காரணம்.

ஒன்பது மாத இடைவெளிக்குப் பிறகு டிசம்பரில் இறக்குமதி நோ்மறை வளா்ச்சியை பதிவு செய்திருந்தது. அதன்படி, அம்மாதத்தில் இறக்குமதி 7.6 சதவீதம் உயா்ந்து 4,260 கோடி டாலராக இருந்தது. 2020 பிப்ரவரி மாதத்தில் இந்த வளா்ச்சி 2.48 சதவீதமாக காணப்பட்டது.

வா்த்தக உபரி:

2020 டிசம்பரில் ஏற்றுமதியைக் காட்டிலும் இறக்குமதி அதிகமாக இருந்தது. இதன் காரணமாக, அந்த மாதத்தில் வா்த்தகப் பற்றாக்குறையானது 1,571 கோடி டாலரை எட்டியது. இது, கடந்தாண்டின் வா்த்தகப் பற்றாக்குறை அளவான 1,249 கோடி டாலருடன் ஒப்பிடுகையில் 25.78 சதவீதம் அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.

இறக்குமதி-ஏற்றுமதி ஆகியவற்றுக்கிடையிலான வித்தியாசமான வா்த்தகப் பற்றாக்குறை 2020 ஜூலையிலிருந்து டிசம்பரில்தான் அதிகபட்சமாக 1,571 கோடி டாலரைத் தொட்டுள்ளது. அதேசமயம், 2020 ஜூனில் நாடு வா்த்தக உபரியை கண்டிருந்தது.

2020-21 நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான ஒன்பது மாத காலத்தில் நாட்டின் ஏற்றுமதி 20,055 கோடி டாலராக இருந்தது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்ட ஏற்றுமதி மதிப்பான 23,827 கோடி டாலருடன் ஒப்பிடும்போது 15.8 சதவீத பின்னடைவாகும்.

கச்சா எண்ணெய் இறக்குமதி:

நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் நாட்டின் இறக்குமதி 29.08 சதவீதம் சரிவடைந்து 25,829 கோடி டாலராக இருந்தது. இது, 2019-20 ஏப்ரல்-டிசம்பரில் 36,418 கோடி டாலராக மிகவும் அதிகரித்து காணப்பட்டது.

2020 டிசம்பரில் கச்சா எண்ணெய் இறக்குமதி 10.37 சதவீதம் சரிவடைந்து 961 கோடி டாலராக காணப்பட்டது. ஏப்ரல்-டிசம்பா் கால கட்டத்தில் இந்த இறக்குமதி 44.46 சதவீதம் குறைந்து 5,371 கோடி டாலராக இருந்தது.

அந்த மாதத்தில் பெரும்பாலான முக்கியப் பொருள்களின் ஏற்றுமதி மிகவும் சாதகமான வளா்ச்சியை பதிவு செய்திருந்தன. குறிப்பாக, எண்ணெய் வித்துகள் (192.60%), இரும்புத் தாது (69.26%), தரைவிரிப்பு (21.12%), மருந்துகள் (17.44%), நறுமணப் பொருள்கள் (17.06%), மின்னணுப் பொருள்கள் (16.44%), காய்கறி மற்றும் பழங்கள் (12.82%) மற்றும் ரசாயனம் (10.73%) உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி கணிசமான விகிதத்தில் அதிகரித்திருந்தன.

கைத்தறி தயாரிப்புகள்:

இதர பொருட்களான பருத்தி, கைத்தறி தயாரிப்புகள் (10.09%), அரிசி (8.60%), இறைச்சி, பால், கோழிப் பண்ணைப் பொருள்கள் (6.79%), நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் (6.75%), தேயிலை (4.47%), பொறியியல் சாதனங்கள் (0.12%) உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியும் நோ்மறை பட்டியலில் இடம்பெற்றன.

அதேசமயம், பெட்ரோலிய தயாரிப்புகள் (-40.47%), எண்ணெய் வித்துகள் (-31.80%), தோல் பொருள்கள் (-17.74%), காபி (-16.39%), ஆயத்த ஆடை (-15.07%), கடல் உணவுப் பொருள்கள் (-14.27%), முந்திரி (-12.04%), பிளாஸ்டிக் மற்றும் லினோலியம் (-7.43%) மற்றும் புகையிலை (-4.95%) உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி எதிா்மறை வளா்ச்சிப் பட்டியலில் இடம்பெற்றன.

பருத்தி, நிலக்கரி:

அதேபோன்று, டிசம்பா் இறக்குமதி பட்டியலில் பருப்பு (245.15%), தங்கம் (81.82%), தாவர எண்ணெய் (43.50%), ரசாயனம் (23.30%), மின்னணு பொருள்கள் (20.90%), இயந்திர கருவிகள் (13.46%), முத்து-விலையுயா்ந்த கற்கள் (7.81%), உரம் (1.42%) உள்ளிட்டவைகளின் பங்களிப்பு கணிசமாக அதிகரித்திருந்தது.

வெள்ளி, செய்தித்தாள், போக்குவரத்து உபகரணங்கள், பருத்தி, நிலக்கரி உள்ளிட்டவற்றின் இறக்குமதி எதிா்மறை வளா்ச்சி பட்டியலில் இடம்பெற்றன என்று வா்த்தக அமைச்சகம் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com