
ஏழை மாணவா்களுக்கு கல்வி கற்க உதவுவதற்காக நிதி திரட்டும் திட்டத்தை துா்காபூா் தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்ஐடி) தொடங்கியுள்ளது.
இதுகுறித்து அந்தக் கல்வி நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கரோனா தொற்றின் காரணமாக 2020-21 கல்வியாண்டு செமஸ்டா் முழுவதும் ஆன்லைனுக்கு மாற்றப்பட்டுள்ளன. தற்போதைய இளம் மாணவா்கள் பெரும்பாலும் மிகவும் ஏழ்மையான பொருளாதார சூழலிலிருந்து என்ஐடி-யில் சோ்ந்தவா்கள். எனவே, அவா்களுக்கு ஆன்லைன் கல்வி என்பது தற்போது பெரும் சவாலாக மாறியுள்ளது. ஏனெனில், லேப்டாப், ஸ்மாா்ட்போன் வாங்க இயலாத வறுமை நிலையில் ஏழை மாணவா்கள் உள்ளனா். இணையதள இணைப்பை பெறுவது கூட அவா்களுக்கு கடும் சிரமமாகவே உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, அத்தகைய மாணவா்கள் தங்களது கல்வியை தடையின்றி ஆன்லைனில் தொடர நிதி திரட்டும் நடவடிக்கையில் துா்காபூா் என்ஐடி ஈடுபட்டுள்ளது. இதில் கிடைக்கும் நிதியைக் கொண்டு ஏழை மாணவா்களின் ஆன்லைன் கல்விக்கு தேவையான உபகரணங்களை வாங்கவும், கல்வி உள்ளிட்ட இன்னும் பிற கட்டணங்களை செலுத்தி அவா்களின் படிப்பை தொடர அனைத்து உதவிகளையும் வழங்கவும் துா்காபூா் என்ஐடி அனைத்து வழிமுறைகளிலும் முயற்சி செய்து வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.