ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவருக்கு விருது: பிரதமர் வழங்கினார்

ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தைச் சேர்ந்த 65 வயது முதியவர், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் சிறந்த வீடு கட்டுமான விருதைப் பெற்றுள்ளார்.
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவருக்கு விருது: பிரதமர் வழங்கினார்

ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தைச் சேர்ந்த 65 வயது முதியவர், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் சிறந்த வீடு கட்டுமான விருதைப் பெற்றுள்ளார்.
 பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (பிஎம்ஏஒய்) என்பது நகர்ப்புற ஏழைகளுக்கான வீடு கட்டும் திட்டமாகும். 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு வீடு கட்டுவதற்காக மத்திய அரசு சார்பில் ரூ.1.66 லட்சம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் சிறப்பாக வீட்டை கட்டியதற்கான விருதுகளை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை காணொலிக் காட்சி மூலம் வழங்கினர்.
 இந்த விருதுக்காக நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 88 பயனாளிகளில் மூவர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர்கள். அவர்களில் தோடா மாவட்டம் பதர்வா பகுதியைச் சேர்ந்த 65 வயது முதியவரான அப்துல் லத்தீப் கனய் என்பவரும் ஒருவர். இவருடன் சேர்ந்து தோடா துணை ஆணையர் சாகர் தத்தாராய், பதர்வா நகராட்சி நிர்வாக அதிகாரி யூசஃப்-உல்-உமர் உள்ளிட்டோரும் இந்த விருதைப் பெற்றுக் கொண்டனர்.
 ஒரு சிறிய துணிக் கடையில் வேலை செய்து வந்த அப்துல் லத்தீப் முதுகுத்தண்டுவட பிரச்னை காரணமாக 15 ஆண்டுகளாக படுக்கையில் இருந்து வந்தார். உடல்நலக் குறைவு அவரை வறுமையிலும் தள்ளியது.
 இதுகுறித்து அப்துல் லத்தீப் கூறியது:
 நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டதன் காரணமாக, என்னிடமிருந்த அனைத்தையும் விற்று மனைவி, இரு மகன்களுடன் ஒரே அறையில் வசித்து வந்தேன். ஆனால், பிரதமர் வீட்டு வசதித் திட்டம் எனது குடும்பத்துக்கு பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது. இன்று எங்களது சொந்த வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். மேலும், சிறந்த கட்டுமானத்துக்காக பிரதமரிடமிருந்து விருதும் கிடைத்துள்ளது என்றார்.
 அவரது 24 வயது மகன் நதீம் லத்தீப் கூறியது: பல வருடங்களாக மிகுந்த சிரமத்தை அனுபவித்து வந்தோம். எங்களிடம் இருந்தது ஒரே அறைதான் என்பதால் உறவினர், நண்பர்களின் வீடுகளில் இரவைக் கழித்து வந்தோம். ஆனால், இப்போது எங்களுக்கு சொந்த வீடு கிடைத்துள்ளது. இதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
 அப்துல் லத்தீப் குடும்பத்தினரின் முயற்சியை பாராட்டிய பதர்வா நகராட்சி நிர்வாக அதிகாரி, "விதிமுறைகளின்படி அவர்கள் வீட்டைக் கட்டினர். தங்களது நேர்மைக்காகவும், அர்ப்பணிப்புக்காகவும் விருதைப் பெற்றுள்ளனர். இது எங்களுக்கும் பெருமை அளிக்கிறது' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com