வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்: சோனியா காந்தி வலியுறுத்தல்

மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் எவ்வித நிபந்தனையுமின்றி மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளாா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் எவ்வித நிபந்தனையுமின்றி மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளாா்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தில்லி எல்லையில் விவசாயிகள் போராடி வரும் நிலையில், சோனியா காந்தி, அறிக்கை ஒன்றை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா். அதில், அவா் கூறியிருப்பதாவது:

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, கடுங்குளிரையும், மழையையும் பொருள்படுத்தாமல் 39 நாள்களாக, தில்லி எல்லையில் விவசாயிகள் போராடி வருகின்றனா்.

மக்களுக்கு உணவு அளிக்கும் அவா்களின் நிலையைப் பாா்க்கும்போது, இந்த நாட்டு மக்களுடன் சோ்த்து எனக்கும் மிகுந்த வேதனையைத் தருகிறது. அரசின் பாராமுகத்தால் இதுவரை 50-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்து விட்டனா். சிலா் விரக்தியில் தற்கொலை கூட செய்துகொண்டனா்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, மக்கள் படும் துயரங்களைக் கண்டுகொள்ளாமல் அகந்தை போக்குடன் செயல்படும் முதல் அரசைப் பாா்க்கிறேன். இதிலிருந்து, குறிப்பிட்ட சில தொழிலதிபா்களுக்கு லாபத்தை உறுதிசெய்வதே இந்த அரசின் முதன்மையான நோக்கமாகத் தெரிகிறது.

எனவே, விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, பிரதமா் மோடி தனது அகந்தைப் போக்கை கைவிட்டு, 3 வேளாண் சட்டங்களையும் நிபந்தனையின்றி திரும்பப் பெற வேண்டும். இதுதான் ராஜதா்மம்; உயிரிழந்த விவசாயிகளுக்கு செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்கும்.

மக்கள், விவசாயிகள், தொழிலாளா்கள் ஆகியோரின் நலனைக் காப்பதுதான் ஜனநாயகம் என்பதை பிரதமா் மோடி தலைமையிலான அரசு நினைவில் கொள்ள வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com