
தமிழ் இலக்கியங்களைப் பாதுகாப்பதே தில்லி தமிழ் அகாதெமியின் முதல் பணியாகும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை தெரிவித்தார்.
தமிழ் மொழி, கலாசாரத்தை மேம்படுத்துவதற்காக தில்லி அரசு தமிழ்அகாதெமியை அமைத்து அறிவித்துள்ளது. இதன் தலைவராக தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, துணைத் தலைவராக முன்னாள் கவுன்சிலர் என். ராஜா மற்றும் 13 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ் அகாதெமி அமைத்ததற்காக தில்லி அரசுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை தனது சுட்டுரைப் பக்கத்தில் நன்றி தெரிவித்திருந்தார். அதற்குப் பதிலளித்த தில்லி முதல்வர் கேஜரிவால், "பன்முகத் தன்மை, ஒற்றுமை என்பது நம் நாட்டின் பெருமை. அதைப் பாதுகாப்பது நமது கடமை; தமிழ் வாழ்க' எனத் தெரிவித்திருந்தார்.
இதேபோல், திமுக தலைவர் ஸ்டாலின் சுட்டுரையில் தெரிவித்திருந்த வாழ்த்தைச் சுட்டிக்காட்டி கேஜரிவால் தனது சுட்டுரையில், "இந்தியாவில் ஆழமாக வேரூன்றியுள்ள கலாசாரங்களில் தமிழ்க் கலாசாரமும் ஒன்றாகும்.
பழைமையான தமிழ் மொழியை ஊக்குவிப்பது எனது அரசின் கடமையாகும். தமிழ் இலக்கியங்களைப் பாதுகாப்பதே இந்த அகாதெமியின் முதல் பணியாக இருக்கும்' என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்திருந்த பதிவைச் சுட்டிக்காட்டி, தமிழில் பதிலளித்துள்ள கேஜரிவால், "பன்மொழிக்கலாசாரம் கொண்ட தில்லியை உருவாக்க எனது அரசு கடமைப்பட்டுள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தில்லியில் தமிழ் அகாதெமி உருவாக்கியதற்கு துணை முதல்வரும் கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியாவுக்கு தமிழ் அகாதெமியின் துணைத் தலைவர் என்.ராஜா, உறுப்பினர்கள் டிஎன்ஜி. இளங்கோவன், அனைத்திந்திய தமிழ் சங்கப் பேரவையின் பொதுச் செயலர் இரா.முகுந்தன், தில்லி தமிழ்ச்சங்கப் பொதுச் செயலர் என்.கண்ணன் உள்ளிட்டோர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
பாஜக புகார்: இதனிடையே, "தில்லி மாணவர்களின் வாய்ப்பை தமிழ் மாணவர்கள் பறித்துச் செல்வதாக குற்றம்சாட்டியிருந்த முதல்வர் கேஜரிவால், தற்போது தமிழுக்கு அகாதெமி அமைக்க உத்தரவிட்டுள்ளார். இது அவரின் வழக்கமான நாடகங்களில் ஒன்றாகும்' என்று பாஜகவின் மேற்கு தில்லி எம்பி பர்வேஷ் வர்மா குற்றம் சாட்டியுள்ளார்.