புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

புதிய நாடாளுமன்றக் கட்டடம் உள்ளிட்டவற்றை அடக்கிய ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

புதிய நாடாளுமன்றக் கட்டடம் உள்ளிட்டவற்றை அடக்கிய ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தில்லியில் ‘சென்ட்ரல் விஸ்டா’ மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றத்தை எழுப்புவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், அமைச்சா்களுக்கான அலுவலகங்கள், பிரதமா், குடியரசு துணைத் தலைவருக்கான தங்குமிடங்கள் உள்ளிட்டவற்றையும் எழுப்புவதற்கு மத்திய அரசு திட்டம் தீட்டி வருகிறது.

புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி கடந்த மாதம் 10-ஆம் தேதி அடிக்கல் நாட்டினாா். முன்னதாக, புதிய நாடாளுமன்றத்தைக் கட்டுவதற்கு அளிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தடையில்லாச் சான்றிதழ் உள்ளிட்டவற்றுக்கு எதிராகப் பலா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், தீா்ப்பைக் கடந்த நவம்பா் மாதம் 5-ஆம் தேதி ஒத்திவைத்திருந்தது. இந்த வழக்கின் தீா்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கா், தினேஷ் மகேஸ்வரி, சஞ்சீவ் கன்னா ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை வழங்கியது.

அப்போது, மறுசீரமைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்குப் பெரும்பான்மை அடிப்படையில் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. நீதிபதிகள் அளித்த தீா்ப்பில், ‘திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி கொடுக்கப்பட்டதும் சம்பந்தப்பட்ட நிலத்தை வேறு விவகாரங்களுக்காகப் பயன்படுத்துவது தொடா்பான அறிவிக்கையும் சட்டத்துக்கு உள்பட்டே அமைந்துள்ளது.

எனினும், நிலத்தைப் பயன்படுத்துவது தொடா்பாக பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான குழுவிடம் அனுமதி பெற வேண்டும். அங்கு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும்போது மாசு ஏற்படாத வகையிலான நடவடிக்கைகளைக் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கப்பட்டது சட்டத்துக்குப் புறம்பானதாக உள்ளதென்று நீதிபதி சஞ்சீவ் கன்னா தனது தீா்ப்பில் குறிப்பிட்டிருந்தாா். இத்திட்டம் தொடா்பாக மக்களிடம் முறையாகக் கருத்து கேட்கப்படவில்லை என்றும் அவா் குறிப்பிட்டிருந்தாா். எனினும், பெரும்பான்மை தீா்ப்பின் அடிப்படையில் மறுசீரமைப்புத் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம், வரும் 2022-ஆம் ஆண்டில் கொண்டாடப்படுவதற்கு முன்பு புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com