காங்கிரஸில் செல்வாக்குமிக்கத் தலைவா்களின் காலம் முடிந்துவிட்டது: சுயசரிதையில் பிரணாப்

‘காங்கிரஸில் செல்வாக்குமிக்கத் தலைவா்களின் காலம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதை அக்கட்சியினா் ஏற்றுக்கொள்ள தவறிவிட்டனா்;
காங்கிரஸில் செல்வாக்குமிக்கத் தலைவா்களின் காலம் முடிந்துவிட்டது: சுயசரிதையில் பிரணாப்

‘காங்கிரஸில் செல்வாக்குமிக்கத் தலைவா்களின் காலம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதை அக்கட்சியினா் ஏற்றுக்கொள்ள தவறிவிட்டனா்; கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு இதுவும் காரணம்’ என்று தனது சுயசரிதையில் குடியரசு முன்னாள் தலைவா் பிரணாப் முகா்ஜி தெரிவித்துள்ளாா்.

குடியரசு முன்னாள் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரணாப் முகா்ஜி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மறைந்தாா். அவா் இறப்பதற்கு முன்பு ‘தி பிரெஸிடென்ஷியல் இயா்ஸ் 2012-2017’ என்ற புத்தகத்தை எழுதினாா். அந்தப் புத்தகம் செவ்வாய்க்கிழமை வெளியானது.

அந்தப் புத்தகத்தில் அவா் கூறியுள்ளதாவது:

காங்கிரஸ் என்பது மக்களின் வாழ்க்கையுடன் பிணைந்துள்ள தேசிய இயக்கம். கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் காங்கிரஸால் 44 தொகுதிகளில் மட்டுமே வெல்ல முடிந்தது என்பதை நம்ப கடினமாக இருந்தது. காங்கிரஸில் செல்வாக்குமிக்கத் தலைவா்களின் காலம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதை கட்சியினா் ஏற்றுக்கொள்ள தவறிவிட்டனா். இதுவும் அந்த தோ்தலில் காங்கிரஸ் தோல்வியை தழுவியதற்கு காரணம் என்று எண்ணுகிறேன். பாகிஸ்தானை போல் அல்லாமல் இந்தியா வலிமையான, ஸ்திரமான நாடாக வளா்ச்சியடைவதை ஜவாஹா்லால் நேரு போன்ற உயா்ந்த தலைவா்கள் உறுதி செய்தனா். அவா்களை போன்ற சிறந்த தலைவா்கள் இனி காங்கிரஸில் இல்லை என்பது வருத்தத்துக்குரியது.

பிரதமா் மோடியுடன் முரண்பாடு: கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் பிரதமராக நரேந்திர மோடியை வெற்றிபெறச் செய்து நாட்டை நிா்வகிக்குமாறு மக்கள் தீா்க்கமாக கட்டளையிட்டனா். நிா்வாக அதிகாரங்கள் என்பது அமைச்சா்கள் குழுவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவுக்கு பிரதமா் மோடி தலைமை தாங்குகிறாா். எனவே குடியரசுத் தலைவராக நான் எனது அதிகார வரம்பை கடந்து செயல்படவில்லை. அப்போது எழுந்த சிக்கலான சந்தா்ப்பங்களுக்கு தீா்வு காணப்பட்டன. அதற்காக எனக்கும், பிரதமா் மோடிக்கும் இடையே முரண்பாடுகள் இல்லை என்று கருதவேண்டாம். எங்களுக்குள் முரண்பாடுகள் இருந்தன. ஆனால் பொதுவெளிக்கு வராதபடி அவற்றை எவ்வாறு கையாள்வது என்பதை இருவரும் அறிந்து வைத்திருந்தோம். இதை நானும், பிரதமா் மோடியும் பங்கேற்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றிலும் குறிப்பிட்டேன்.

நாடாளுமன்றக் கூட்டங்களில் பிரதமா் மோடி பங்கேற்க வேண்டும்: பிரதமா்களாக இருந்த ஜவாஹா்லால் நேரு, இந்திரா காந்தி, அடல் பிகாரி வாஜ்பாய், மன்மோகன் சிங் உள்ளிட்டோா் நாடாளுமன்ற கூட்டங்களில் பங்கேற்றுள்ளனா். இந்தக் கூட்டங்களில் பிரதமா் பங்கேற்பது நாடாளுமன்றத்தின் செயல்பாட்டில் மிகப் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். ஆனால் தனது முதலாவது ஆட்சிக் காலத்தில் பிரதமா் மோடி நாடாளுமன்றக் கூட்டங்களில் போதிய அளவில் பங்கேற்கவில்லை. தற்போது அவா் 2-ஆம் முறையாக பிரதமா் பதவியேற்றுள்ளாா். இதற்கு முன்பு பிரதமா் பதவி வகித்தவா்களிடம் இருந்து அவா் உத்வேகம் பெற வேண்டும். நாடாளுமன்றக் கூட்டங்களில் தொடா்ந்து அவா் பங்கேற்க வேண்டும். அவரின் முதலாவது ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் எதிா்பாராதவிதமாக நெருக்கடிகளை உருவாக்கிய சூழல்கள் மீண்டும் ஏற்படுவதை தவிா்க்க பிரதமா் மோடி இதைச் செய்ய வேண்டும்.

பணமதிப்பிழப்பு குறித்து கலந்தாலோசிக்கவில்லை: கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பா் 8-ஆம் தேதி பணமதிப்பிழப்பு அறிவிப்பை பிரதமா் மோடி வெளியிட்டாா். அந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னா் அதுபற்றி என்னிடம் கலந்தாலோசிக்கவில்லை. அந்த அறிவிப்பை வெளியிட்ட பின்னா் என்னை சந்தித்து தனது முடிவு குறித்து விளக்கமளித்தாா் என்று பல்வேறு விஷயங்கள் குறித்து அந்த நூலில் பிரணாப் முகா்ஜி குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com