இந்திய தடுப்பூசிகளின் செயல்திறன்: விரக்தியால் எதிர்க்கட்சியினர் சந்தேகம்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் செயல்திறனை விரக்தியடைந்த அரசியல் தலைவர்கள் சிலர் சந்தேகிக்கின்றனர் என்றார் மத்திய சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி.
இந்திய தடுப்பூசிகளின் செயல்திறன்: விரக்தியால் எதிர்க்கட்சியினர் சந்தேகம்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் செயல்திறனை விரக்தியடைந்த அரசியல் தலைவர்கள் சிலர் சந்தேகிக்கின்றனர் என்றார் மத்திய சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி.
 பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியின் சோதனை மூன்றாம்கட்டத்தில் இருக்கும் நிலையில், அத்தடுப்பூசிக்கு அனுமதி அளித்திருப்பது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் சிலர் சந்தேகம் எழுப்பியதற்குப் பதிலளிக்கும் வகையில் நக்வி இவ்வாறு கூறியுள்ளார்.
 தெற்கு மும்பையில் உள்ள ஹஜ் இல்லத்தில் ஹஜ் கமிட்டி அதிகாரிகள், ஹஜ் பயண அமைப்புகளைச் சேர்ந்தவர்களுடன் நக்வி செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் அவர் பேசியது: தொற்றுநோயின்போது, தேவைப்படும் ஒவ்வொரு நபருக்கும் நிவாரணம் வழங்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அயராது திறம்பட செயல்பட்டது. தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்துக்கு மோடி தலைமை வகித்தார். இந்தியா தற்சார்பு பெறும் வகையில், ஒரு நெருக்கடியை வாய்ப்பாக மாற்றினார் மோடி.
 இதுவரை இல்லாத வகையில், 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் பொருள்களும், 8 கோடி குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு உருளைகளும் மோடி அரசால் வழங்கப்பட்டன. 20 கோடி பெண்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ.1500 செலுத்தப்பட்டது. பிரதமரின் கிஷான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் 10 கோடி விவசாயிகளுக்கு ரூ.19 ஆயிரம் கோடி வழங்கப்பட்டது. வேளாண் துறைக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் உள்பட பல்வேறு துறைகளுக்கு சுயசார்பு இந்தியா தொகுப்பு மூலம் ரூ.20 லட்சம் கோடி வழங்கப்பட்டது.
 தொற்றுநோய் காலத்தில் சிறப்பு ரயில்கள் மூலம் 60 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பினர். புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் ரூ.17 ஆயிரம் கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டன.
 கடினமாக உழைக்கும் இந்திய விஞ்ஞானிகளால் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவசரகால பயன்பாட்டுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரு தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பது ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டிய விஷயமாகும். இச்சூழலில் விரக்தியடைந்த அரசியல் தலைவர்கள் சிலர் இந்தத் தடுப்பூசிகள் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com