சபர்மதி ஆஸ்ரமத்தில் 9 மாதங்களுக்குப் பிறகு பார்வையாளர்களுக்கு அனுமதி

குஜராத்தில் உள்ள சபர்மதி ஆஸ்ரமம் சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு பார்வையாளர்களுக்காகத் திறக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் உள்ள சபர்மதி ஆஸ்ரமம் சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு பார்வையாளர்களுக்காகத் திறக்கப்பட்டுள்ளது.
 ஆமதாபாதின் புறநகர் பகுதியில் சபர்மதி ஆற்றங்கரையோரத்தில் சபர்மதி ஆஸ்ரமத்தை அமைத்து அங்கு கடந்த 1917-ஆம் ஆண்டு முதல் 1930-ஆம் ஆண்டு வரை மகாத்மா காந்தி வசித்தார். இந்த இடம் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த ஆஸ்ரமத்துக்கு கரோனா பாதிப்புக்கு முன்பு வரை உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுமார் 2 ஆயிரம் பேர் தினசரி வந்து சென்றனர். கரோனா தீநுண்மி பரவலை அடுத்து கடந்த மார்ச் 20ஆம் தேதி முதல் இங்கு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது திங்கள்கிழமை முதல் சபர்மதி காந்தி ஆஸ்ரமத்துக்குள் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
 இது குறித்து ஆஸ்ரமத்தின் இயக்குநர் அதுல் பாண்டியா செவ்வாய்க்கிழமை கூறியிருப்பதாவது:
 சமூக இடைவெளி உள்ளிட்ட கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் சபர்மதி காந்தி ஆஸ்ரமம் பார்வையாளர்களுக்காகத் திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஆஸ்ரமத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
 ஆஸ்ரமத்துக்குள் 18 இடங்களில் கிருமிநீக்க திரவங்கள் வைக்கப்பட்டுள்ளன.
 பார்வையாளர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுகின்றனரா என்பதை உறுதி செய்யும் பணியில் ஆஸ்ரம ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆஸ்ரமத்துக்குள் உள்ள காந்தியடிகளின் வீடு, அருங்காட்சியகம் ஆகியவற்றில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
 புத்தக நிலையம், காதி பொருள்கள் விற்பனையகம், கைராட்டை கலைக்கூடம் போன்றவற்றைப் பார்வையிடுவதற்கு அனுமதி அளிக்கப்படாது. இங்குள்ள பொருள்களைப் பார்வையாளர்கள் தொடக்கூடும் என்பதால் கரோனா தீநுண்மி பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com