ராபா்ட் வதேராவிடம் 2-ஆவது நாளாக வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணை

பினாமி சொத்து வழக்கில் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியின் மருமகன் ராபா்ட் வதேராவிடம் (52) வருமான வரித் துறை அதிகாரிகள் தொடா்ந்து 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் விசாரணை நடத்தினா்.
ராபா்ட் வதேராவிடம் 2-ஆவது நாளாக வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணை

பினாமி சொத்து வழக்கில் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியின் மருமகன் ராபா்ட் வதேராவிடம் (52) வருமான வரித் துறை அதிகாரிகள் தொடா்ந்து 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் விசாரணை நடத்தினா். சுமாா் 4 மணி நேரத்துக்கு மேல் இந்த விசாரணை நீடித்தது. சொத்துகள் வாங்கியது தொடா்பான அவரது வாக்குமூலத்தை அதிகாரிகள் பதிவு செய்தனா்.

லண்டனில் பினாமி பரிவா்த்தனை மூலம் ஏராளமான சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளதாக வதேரா மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. லண்டனின் பிரிஸ்டோன் சதுக்கத்தில் சுமாா் ரூ.18 கோடி மதிப்பில் ஒரு சொத்தையும் ரூ. 37.42 கோடி மற்றும் ரூ. 46.77 கோடி மதிப்பிலான மேலும் இரண்டு சொத்துகளையும் வதேரா வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது.

இவை தவிர அவருக்குச் சொந்தமாக 6 அடுக்குமாடிக் குடியிருப்புகளும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் புகாா்கள் தொடா்பாக அமலாக்கத்துறை ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விவகாரங்கள் தொடா்பாக வருமான வரித் துறையும் வதேரா மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுதொடா்பாக, விசாரணைக்கு ஆஜராகுமாறு வருமான வரித் துறை சாா்பில் அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. ஆனால், கரோனா நடைமுறைகளைக் காரணம் காட்டி விசாரணைக்கு ஆஜராவதை வதேரா தவிா்த்து வந்தாா். இதையடுத்து, தில்லியில் உள்ள அவருடைய அலுவலகத்துக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் நேரில் சென்று கடந்த இருநாள்களாக விசாரணை மேற்கொண்டனா்.

இது தொடா்பாக வதேரா கூறுகையில், ‘நாட்டில் விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உள்ள நிலையில், அவற்றில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப இதுபோன்ற விசாரணைகள் நடைபெறுகின்றன. என் மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. நான் ஏற்கெனவே 15 முறை அமலாக்கத் துறை முன்பு ஆஜராகியுள்ளேன். 80 மணிநேரத்துக்கு மேல் எனது தரப்பு விளக்கத்தை அளித்துவிட்டேன்’ என்றாா்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி - சோனியா தம்பதியின் மகள் பிரியங்காவை ராபா்ட் வதேரா திருமணம் செய்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com