தில்லி மழையால் அவதி: 42-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்

தில்லியில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், கடும் குளிருக்கு மத்தியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
42-வது நாளாக போராட்டம்: மழைக்கு மத்தியில் போராடி வரும் விவசாயிகள்
42-வது நாளாக போராட்டம்: மழைக்கு மத்தியில் போராடி வரும் விவசாயிகள்


தில்லியில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், கடும் குளிருக்கு மத்தியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

தொடர் மழையால் இன்று நடைபெறவிருந்த டிராக்டர் பேரணி நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் அதற்கு தயாராகி வருகின்றனர்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியாணா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தில்லியின் பல்வேறு எல்லைகளில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுடன் இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. 

நேற்று முன் தினம் (ஜன.4) நடைபெற்ற 7-வது கட்ட பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனையடுத்து வரும் 8-ஆம் தேதி மீண்டும் இரு தரப்பில் பேச்சு நடைபெறவுள்ளது.

 இதனிடையே தில்லியில் நான்காவது நாளாக தொடர் மழை பெய்து வருகிறது. ஏற்கனவே கடும் குளிர் நிலவி வரும் நிலையில், மழையும் பெய்வதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

சாலைகளில் அமைத்துள்ள கூடாரங்கள் மழையிலிருந்து காத்தாலும், தரையில் தண்ணீர் தேங்குவதால், பெரும்பாலான கூடாரங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மழையில் விறகுகள் நனைந்ததாலும், மாற்று உடைகள் நனைந்ததாலும் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

போராட்டத்தின்போது ஏற்கனவே 40-க்கும் அதிகமான விவசாயிகள் உயிரிழந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழை மற்றும் கடும் குளிர் விவசாயிகளை மேலும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனினும் நாளை நடைபெறும் டிராக்டர் பேரணிக்கு தயாராகி வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். குடும்பங்களை விட்டு சாலைகளில் பல இன்னல்களுக்கு மத்தியில் போராடி வரும் எங்கள் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com